திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோவில்
சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள் காட்சியளிக்கும் தேவாரத்தலம்
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள தேவாரத்தலம் திருச்சத்தி முற்றம். மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.
விஜயாலய சோழன் முதல் மூன்றாம் ராஜராஜ சோழன் வரை அனைவரும் தங்கள் இளமைக் காலத்தைக் கழித்த பகுதியாக இவ்வூர் திகழ்ந்தது. சைவத்தை நிலைநாட்டி வளர்த்த மங்கையர்க்கரசியார், செம்பியன் மாதேவி, குந்தவை பிராட்டியார் வாழ்ந்து அரசாட்சி செய்த ஊராகவும் இவ்வூர் திகழ்கிறது.
சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும், அதன் பின்புறம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.
தல வரலாறு
பக்தியே முக்திக்கு வித்து என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட சிவ, பார்வதி விரும்பினர். இதற்காக, சக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை, ஈசனை நினைத்து தவம் இருந்தார். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதி சொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, அதேசமயம் சிவனாரின் திருமேனி மீது, பாதம் படாமல் கட்டியணைத்தபடி தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலம் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகும். சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி, நல்ல இல்வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு பலப்படவும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.