
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோவில்
கபால பூணூலும், சர்ப்ப அரைஞாணும் அணிந்த காசிக்கு ஈடான பைரவர்
சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.
இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன் பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞாண் அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசி பைரவரை செதுக்கிய அதே சிற்பியால் இவரும் செய்யப்பட்டதாக நம்பப் பெறுகிறது .இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் மூலவர் பால்வண்ண நாதர் என்றாலும், இக்கோவிலில் கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதால் இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் விமர்சையாக நடைபெறுகிறது. அஷ்டமி நாட்களிலும், பௌர்ணமி இரவிலும்) இவரை வழிபடுவது விசேஷமாகக் கருதப் பெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
கந்த சஷ்டி கவசம் இயற்ற அருளிய செந்தில் முருகன்
நோய்,நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்க வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி 'காக்க' இறைவனை வேண்டுவது காப்புக் கவசமாகும். இறைவனைத் தலையால் வணங்குவது முறையாதலால், உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ்வேண்டுதல் அமையும். இவ்வாறு பாடி இறைவனை வேண்டும் கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம். இந்தக் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி, வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும். இதனை இயற்றியவர் பால தேவராய சுவாமிகள் என்ற ஒரு தமிழ் புலவர். இவர் 1857 இல் தொண்டை நாட்டு வல்லூரில் வாராச்சாமி பிள்ளை என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தேவராயன். இவர் கணக்கர் வேலை பார்த்துவந்தார்.
பால தேவராய சுவாமிகள் ஒரு சமயம் தீராத வயிற்று வலியால் அவதிபட்டார். எவ்வளவு மருத்துவ சிகிச்சை செய்தும் வயிற்றுவலி குணமாகாததால், கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து, திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூரில் முருகப்பெருமான் அவருக்கு காட்சி அளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும், அது அவர் நோயினை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருடைய நோயினையும் தீர்க்கும் பாடலாக அமையும் என்றும், யாரெல்லாம் அந்தப் பதிகத்தைபடிக்கின்றார்களோ அவர்கள் நோயும், அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என்று அருளாசி தந்தார்.
அப்போது திருச்செந்தூர் கோவிலில் பால தேவராய சுவாமிகள் மட்டுமல்ல, இன்னும் ஏகப்பட்ட நோயாளிகள் இருந்தனர். தேவராயருக்கு வயிற்றில் வலி என்றால், மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, மூலம், தொடையில் புண் , கணுக்கால் வலி என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். இது போல பேய் , பில்லி சூன்யம், சித்தபிரம்மை, வறுமை இவற்றால் பாதிக்கப்பட்டோரும் அங்கு இருந்தனர். அந்த மொத்த மக்களின் குரலாக, முருகனிடம் எல்லா பிணிகளும், நோய்களும் தீர முருகன் சொன்னபடி பாலதேவராயர் பாடினார். எல்லா பக்தரையும் முருகன் எக்காலமும் காக்கும்படி பாடினார்.
பால தேவராயர்,திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து பாட தொடங்கினார். அவர் பாடி முடிக்கவும், அவரின் கொடும் நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்தப் பாடலை தொகுத்து முடித்தார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.
சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது. அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதைப் பாடுவார்களாம்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி, காவல்தேடும் பாடல் அது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள வேண்டும் பாடலாக உள்ளது.
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க……

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
செந்தில் ஆண்டவருக்கு எதிரே நந்தியும், இரண்டு மயில்களும் நிற்கும் அபூர்வ காட்சி
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.
கருவறையில் முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சிதருகிறார். முருகனின் சிலைக்கு பின்னால் இடதுபுற சுவரில் போரில் வெற்றிபெற்று வந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்தபிறகே முருகனுக்கு பூசை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது அகத்தியர் வழிகாட்டுதலின் கீழ், பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இந்த அபூர்வமான வழிபாட்டிற்கு பார்த்திபலிங்க பூஜை என்று பெயர்.
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில், மந்திர மயில். சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து திருச்செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, இரண்டு மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது. இப்படி ஒரு அமைப்பை, நாம் வேறு எந்த முருகத் தலத்திலும் காண முடியாது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
உற்சவர் சண்முகருக்கு முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்பு
திருச்செந்தூர் உற்சவமூர்த்தி சண்முகர் முதலில் திருவனந்தபுரத்தில் தான் எழுந்தருளி இருந்தார். திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா அரசாண்ட சமயம் அது. திருச்செந்தூரில் வசித்து வந்த திரிசுதந்திர முக்காணி பிரமணர்களுக்கும், திருவனந்தபுரம் முக்காணி பிராமணர்களுக்கும், திருமண வழியில் நெருங்கிய உறவு இருந்தது. அதனால் திருவனந்தபுரம் சென்று வந்து கொண்டிருந்த திருச்செந்தூர் திருசுதந்திரர்கள் சண்முகரை அங்கு கண்டனர் . அவர்களுக்கு சண்முகரை எப்படியாவது திருச்செந்தூர் கோவிலுக்கு எடுத்துச் சென்று உற்சவமூர்த்தி ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முருகப்பெருமானும், தன்னுடைய சண்முகர் திருமேனியை திருச்செந்தூருக்கு எடுத்துச் செல்ல அவர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் காரியத்தை நிறைவேற்ற திருசுதந்திரர்கள், அப்போது திருவனந்தபுரத்தில் வியாபாரத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற பரக்க செட்டிமார் உதவியை நாடினார்கள். அவர்கள் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர். ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க முருகரை எடுத்து இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்திலம்பதி எனும் திருச்செந்தூரை நோக்கி புறப்படலாயினர். அவர்களும் மகிழ்வுடன் உதவ முன் வந்தனர். ஓர் இரவு சண்முகரின் விருப்பதிற்கிணங்க, முருகரை எடுத்து இரவோடு இரவாக ஒரு மூங்கில் கம்பில் துணியை கட்டி ஊஞ்சல் பல்லக்கு செய்து அதில் சண்முகரை கிடத்தி, துணியை வைத்து மூடி திருச்செந்தூரை நோக்கி புறப்படலாயினர். சண்முகத்தை தூக்கிக்கொண்டு சென்ற திரிசுதந்திர்களையும், பரக்கசெட்டிமார்களையும் வழியில் திருவிதாங்கூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் தடுத்தனர். அவர்களிடம் குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கிறது. அதனால் பாண்டி நாட்டுக்கு வைத்தியம் பாக்க கொண்டு போகிறோம் என்று கூறினார்கள். காவலர்கள் அம்மை என்ற உடன் திறந்து பார்க்கக்கூட அச்சப்பட்டு, அந்த கூட்டத்தை காவலர்கள் விரைவில் அனுப்பி விட்டார்கள். காவலரிடம் இருந்து தப்பித்த அடியவர்கள் மேலும் விரைவாக நடக்கலாயினர் .
அதேசமயம் சண்முகர் சிலையை காணவில்லை என்று திருவனந்தபுரத்தில் மார்த்தாண்ட மகாராஜா மிகவும் பதட்டம் அடைந்தார். நாலாபுறமும் ஆட்களை அனுப்பி சிலையை தேட உத்தரவிட்டார். அன்று இரவு மகாராஜா கனவில் வந்த சண்முகர், என் குழந்தைகள் என் விருப்பப்படி தான் என்னை திருச்செந்தூருக்கு அழைத்து செல்கிறார்கள். எனவே, நீ பதட்டப்பட வேண்டாம். என்னைக் காண இனி திருச்செந்தூர் வா என்று கட்டளை இட்டார்.
சண்முகரை சுமந்து செல்லும் அடியவர்கள், கடற்க்கரை ஒட்டிய வனாந்திர காட்டுப்பகுதிக்கு வந்தபோது, காலைப்பொழுது விடிந்துவிட்டது. அந்த இடத்தில் சண்முகருக்கு ஜல அபிஷேகம் செய்து, அவர் பசிக்கு நிவேதனம் செய்ய ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். அந்தக் காட்டுப் பகுதியில், குடிசையில் ஒரு வயதான பெண் வசித்து வந்தாள். அவள் காலை உணவு தயாரிக்க புளித்த மாவும், பயறு கஞ்சியும் வைத்திருந்தாள். உடனே இந்த சண்முகரின் அடியவர் கூட்டம் அந்த பெண்மணியிடம் வேண்டி, சண்முகருக்கு புளித்த தோசையும், கஞ்சியும் நைவேத்தியமாக படைத்து பூஜை செய்தார்கள். அந்த நிவேதனம்தான், திருச்செந்தூர் கோவில் உதயமார்தாண்ட கட்டளையில், இன்று வரை ஒரு நாள் முன்பே அரைத்த புளித்த தோசை, பயறு கஞ்சி என சண்முகருக்கு தினமும் நிவேதனம் செய்கிறார்கள். அந்த அம்மைத் தழும்புதான் இன்றும் உற்சவர் சண்முகர் முகத்தில் உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
படிக்காதவரையும் தல புராணம் எழுத வைத்து பாவலராக்கிய செந்திலாண்டவன்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மடைப்பள்ளியில் பணியாற்றிய ஒரு பக்தர், முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். முதுமையின் காரணமாக, நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு அவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார்.
ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார். இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார். அப்போது, நில்லுங்கள்!, என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான். கரைக்கு திரும்பிய அவரிடம், கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். இதற்காகவா உயிர் துறப்பார்கள்!, என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்? என்றான்.
முதியவர், எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன் சொன்னார். நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!, இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான் சிறுவன். முதியவர், ' பள்ளிக்கூடம் போகாத
எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே!, என்னால் இது எப்படி சாத்தியமாகும்?' என்றார். மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும், நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ, அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான். சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர். இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல!, இன்று முதல் 'வென்றிமாலை கவிராசர்' என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன்.
முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார். முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ? உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து மறைந்தானோ? மனத்தெளிவு அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார். பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். முருகன் தனக்கு காட்சி தந்ததையும், அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோவிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர். கோவிலை விட்டு வெளியேறிய கவிராசர், மனம் குமுறி, தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார்.
கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது, அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் அவர். வியப்படைந்து போனார். எவ்வளவு சிறப்பான நூல் இது. கடலில் கிடந்து கசங்குகிறதே!, என்று அந்நூலை செந்திலாண்டவன் கோவிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார். நூலின் முடிவில் நூலை எழுதியது *வென்றிமாலை கவிராயர்* என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர். கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள். உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன்
மன்னிக்க வேண்டும் என கேட்டு, தகுந்த மரியாதையையும் செய்தனர். பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் திருச்செந்தூர் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்கும் செந்தில் ஆண்டவன்
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.
முருகன் அசுரர்களை வதம் செய்தவர் என்பதால் தீய ஆவி பாதிப்பு கொண்டவர்கள், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்
திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் நாம் காணலாம்.
கடல் மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ள கருவறை
கோவில் கருவறை கடல் மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ளது. ஆனால் சுனாமியின்போது கூட இக்கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கருவறையின் பின்புறமாக அமைந்த ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
பிரகாரம் இல்லாத மூலவர் சன்னதி
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
நான்கு உற்சவர்கள்
பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு.
மூலவருக்கு வெண்ணிற ஆடை
மூலவருக்கு எப்போதும் வெண்ணிற ஆடை மட்டுமே சார்த்தப்படும் ஒரே முருகதலமும் திருச்செந்தூர்தான்.
வீரபாகு தேவருக்கு முதல் வழிபாடு
முருக தலங்களிலேயே, முருகனின் தளபதியான வீரபாகு தேவருக்கு வழிபாடு நடத்தப்பட்ட பின்பே, மூலவருக்கு வழிபாடு நிகழ்த்தப்படும் ஒரே தலம் திருச்செந்தூர்தான். கோவிலின் காவல்தெய்வமாக வீரபாகுதேவர் உள்ளதால், வீரபாகுபட்டினம் என்ற சிறப்புப்பெயரும், இத்தலத்திற்கு உண்டு.
ஒன்பதுகால பூஜை
மார்கழி மாதம் மட்டும் பத்துகால பூஜையும், இதர மாதங்களில் ஒன்பதுகால பூஜையும், நடத்தப்படும் ஒரே முருகதலம் திருச்செந்தூர்தான்.
ஆறுமுக அர்ச்சனை
முருகதலங்களிலேயே, ஆறுமுக அர்ச்சனை நடைபெறும் ஒரேதலம் இதுதான். அப்போது, ஆறுமுகங்களுக்கும், ஆறுவகை உணவுகள் படைக்கப்படுகின்றன.
புளி, காரம் சேர்க்கப்படாத நைவேத்தியம்
மூலவர் தவ கோலத்தில் இருப்பதால், மூலவருக்குரிய உணவில், புளி, காரம் சேர்க்கப்படாத ஒரே முருக தலம் திருச்செந்தூர்தான்.
மூலவரின் எதிரில் நந்தியும் இரண்டு மயில்களும் அமையப் பெற்ற தலம்
முருகதலங்களிலேயே, கருவறைக்கு எதிரே, நந்தி, இருமயில்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள ஒரே தலம் திருச்செந்தூர்தான்.
உப்புத்தன்மை இல்லாத நாழிக்கிணறு
முருகன் தனது படைவீரர்களின் தாகம் தீர்க்க, தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உவர்ப்பு அற்ற நன்னீராகத் திகழ்கிறது.
வள்ளி குகை
கடற்கரைப் பகுதியில், சந்தன நிறத்தில் காட்சி தரும் மலையில் அமைந்துள்ளது வள்ளி குகை. தம்பி முருகப்பெருமானுக்காக அண்ணன் விநாயகர் யானையாக வந்து, வள்ளியிடம் நின்றதும் பயந்து போன வள்ளி, இந்த குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.
இங்கு வந்து வள்ளிதேவியை வணங்கினால், விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கும். கல்யாணம் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
கங்கை பூஜை
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, 'கங்கை பூஜை'' என்கின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
தீபாவளிக்கு இந்திரன், தன் மருமகன் முருகப்பெருமானுக்கு புத்தாடை வழங்கும் தலம்
அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன. இவ்வாறு கோயில்களில் ஐந்து கோயில்கள் மலை மீது அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடற்கரையை ஒட்டி அமையப் பெற்ற சிறப்பை கொண்டிருக்கிறது. முருகப்பெருமானுடன் அவரது தளபதி வீரபாகு மற்றும் படைவீரர்கள் தங்கியிருந்த படைவீடுதான் திருச்செந்தூர் ஆகும்
வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் கபாடபுரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து இக்கோவிலின் பழமையை நாம் அறியலாம். இங்கிருக்கும் முருகப்பெருமான் செந்திலாண்டவர் என அழைக்கப்படுகிறார். இங்கு சூரபத்மனை போரில் ஜெயித்ததால் முருகன் 'செயந்தியாண்டவர்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் 'செந்திலாண்டவர்' என மருவியது. அது போல் இக்கோவில் இருக்கும் ஊரும் 'திருசெயந்தியூர்' என்பதிலிருந்து 'திருச்செந்தூர்' என்று மாறியது.
திருச்செந்தூர் கோவிலில் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், தெய்வயானையின் தந்தையான இந்திரன் இத்தலத்தில் மருமகன் முருகப்பெருமானுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஐதீகம்.
கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசைவரை, இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே.
கேதார கௌரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு, அதன் பலனாக சிவபெருமானும் பார்வதி தேவியும், அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.
ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதாரகௌரி விரதமாகும். தீபாவளி திருநாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும். தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.

நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில்
மூலவரின் எதிரில் அமர்ந்திருக்கும் அபூர்வ இரட்டை நந்திகள்
படப்பையில் இருந்து ஒரகடம் போகும் வழியில் அமைந்துள்ள சரபணஞ்சேரி என்ற கிராமத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நாவலூர் ஏகாம்பரேசுவரர் கோவில். 900 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.
பொதுவாக சிவாலயங்களில் மூலவரின் முன் ஒரு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால் இத்தலத்து மூலவரின் எதிரில் இரண்டு நந்திகள் ஒன்றின் அருகில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. இப்படி அருகருகே அமர்ந்திருக்கும் இரட்டை நந்திகளை, வேறு எந்த சிவாலயத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இவற்றில் ஒரு நந்தி இத்தலத்து மூலவரையும், இத்தலத்துக்கு நேர் கோட்டில் இருக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவரையும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மற்றொரு நந்தி, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்கும் வண்ணம் தன் தலையை திருப்பி அமர்ந்துள்ளது. இவ்விரு நந்திகளை தரிசித்தால், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் தலங்களை தரிசித்த பலன்கள் கிட்டும்.

திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்
பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடிய பாலச்சந்திர விநாயகர்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் இது. இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி. இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக அருள்புரிகிறார். தன் அழகினால் அகங்காரம் கொண்டு அவமதித்த சந்திரனை விநாயகப் பெருமான் சாபமிட்டார். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நன்னிலை அடையுமாறு தேவர்கள் அறிவுருத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக, விநாயகப் பெருமான் காட்சி கொடுக்கும் தலம் இது.
பிரார்த்தனை
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனதில் உள்ள அகந்தை நீங்கி எப்போதும் சுடர்விடும் ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.

திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில்
நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் கருடாழ்வார் பயந்த நிலையில் காட்சியளிக்கும் திவ்யதேசம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில், விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, திருமால் தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை. வேள் என்றால் விருப்பம். தானாக விருப்பப்பட்டு அமைதியைத் தேடி இத்தலத்தில் யோக மூர்த்தியாக இருப்பதால் வேளிருக்கை என்று ஆகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. மூலவர் முகுந்த நாயகன், நின்ற கோலமாக கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இவருக்கு அழகிய சிங்கர் நரசிம்மர், ஆள் அரி என்ற பெயர்கள் உண்டு.
ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தபோது, அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். பிரம்மதேவர் யாகம் இடையூறு இல்லாமல் நடக்க திருமாலிடம் வேண்டினார். திருமால், முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே கோலத்துடன் ஹஸ்திசைலம் என்ற குகையில் இருந்து புறப்பட்டு, பிரம்மதேவனின் யாகத்துக்கு இடையூறு அளித்த அசுரர்களை அவ்விடத்தில் இருந்து விரட்டிச் சென்றார். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்த இடம் வரை ஓடிவந்தனர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த நரசிம்மப் பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். பயந்து ஓடிய அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே சிறந்தது என்று நினைத்து, தனது கோப உணர்வுகளை நீக்கி, யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து தரிசனம் தருகிறார். இதனாலேயே இவரது சந்நிதி 'காமாஷிகா நரசிம்மர் சந்நிதி'என்று பெயர் பெற்றது.
இக்கோவிலில், நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அரிய தோற்றம் ஆகும்.

தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்
சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.
சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
காளியாட்டத் திருவிழா
மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.
முடிகொண்டான் கோதண்டராமர் கோவில்
அனுமன் உடன் இல்லாமல் ராமர் எழுந்தருளியிருக்கும் தலம்
திருவாரூர் மாவட்டத்தில், தில்லைவிளாகம், வடுவூர், பருத்தியூர், முடிகொண்டான், அதம்பார் ஆகிய தலங்களில் அமைந்துள்ள ராமர் கோவில்கள் 'பஞ்சராமர் க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதில் முடிகொண்டான் கோதண்டராமர் கோவில் திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், திருக்கண்ணபுரம் மற்றும் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
கருவறையில், வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளி இருப்பதை நாம் இத்தலத்தில் காணலாம். ராமரின் இடது புறம் சீதையும், வலது புறம் லட்சுமணனும் உள்ளனர். ராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்புகையில் பரத்வாஜ முனிவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் ஆசிரமத்தில் தங்கி இருந்து விருந்துன்ன சம்மதித்தார். 16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சந்நிதி இருப்பதையும் காணலாம்.
ராமருக்கு விருந்தோம்பல் செய்வதில் உற்சாகமடைந்த பரத்வாஜ ரிஷி, ராமரிடம் தனது கிரீடத்துடன் (முடி) தரிசனம் தரும்படி கேட்டுக் கொண்டார். ராமர் தனது தனது குலதெய்வமான ரங்கநாதரின் ஆசீர்வாதத்தைப் பெறாமல் இதைச் செய்ய முடியாது என்று கூறியபோது, பரத்வாஜ ரிஷி தனது சக்தியைப் பிரயோகித்து ரங்கநாதரை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். ரங்கநாதர், ஐந்து தேவலோக மலர்களால் ஆன மலர் கிரீடத்தை ராமருக்கு சூட்டினார். ராமர் அந்த மலர் கிரீடத்துடன் பரத்வாஜர் முனிவருக்கு காட்சி தந்ததால் இத்தலத்திற்கு முடிகொண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்து உற்சவமூர்த்தி ராமர் தனது உடலில் மூன்று வளைவுகளுடன், அதாவது முகம் ஒரு திசையில், இடுப்பு. மற்றொன்று மற்றும் மூன்றாவது வளைவில் கால் என்ற நிலையில் காட்சி அளிப்பது தனித்துவமானது. இந்த ஆசனம் 'உத்தம லக்ஷணம்' என்று குறிப்பிடப்படுகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர். குறிப்பாக மேல்நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறுகிறது. உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள். கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்
காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்
கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.
மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.
பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.
பிரார்த்தனை
தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.
ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.

நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்
இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படும் தலம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இறைவன் திருநாமம் காசிவிசுவநாதர். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்தத் தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை, காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். அதனால், இத்தலம் இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படுகின்றது.
இத்தலத்து மூலவர் காசி விசுவநாதருக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலை சாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.
தலையை சாய்த்து அருள் பாலிக்கும் குபேர சனீஸ்வரர்
இத்தலத்தில் சனீஸ்வர பகவான் குபேர சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும், தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.
பிரார்த்தனை
தொழில் விருத்தி, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் இங்கே பிரார்த்தனை செய்கிறார்கள்.

வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்
தென்திசை நோக்கி காட்சி தரும் ஞான துர்க்கை
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவன் திருநாமம் திருமறைக்காடர். இறைவியின் திருநாமம் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள். 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது.
பொதுவாக சிவாலயங்களில், மூலவர் கருவறையின் சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கி பரிவார தேவதையான துர்க்கை எழுந்து அருளி இருப்பாள். ஆனால் இத்தலத்தில் பரிவார தேவதையான துர்க்கையானவள் தென்திசை (மூலவர் சந்நிதியை) நோக்கி காட்சி தருகிறாள். இது ஒரு அரிதான காட்சியாகும். தட்சிணாமூர்த்தி போல் தென்திசை நோக்கி எழுந்தருளி இருப்பதால் இவளை ஞான துர்க்கை என்பார்கள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளி உள்ளாள். இவள் வேதாரண்யத்தின் காவல் நாயகி என்பர் ஆன்றோர்.
பிரார்த்தனை
இவள் மிகுந்த வரப்பிரசாதி என்பதால் இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகின்றாள். துர்க்கை அம்மன் சந்நிதியில் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜைகள் மிகவும் விசேஷம். இவளை வழிபட்டால் குழந்தை இல்லாமை, திருமணத் தடை, பில்லி- சூனியம், கிரக கோளாறுகள் போன்ற குறைபாடுகள் விலகும்.

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்
அமர்ந்த கோலத்தில் இருக்கும் அபூர்வ அர்த்தநாரீசுவரர்
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரரின் திருமேனி அற்புதமான கலையம்சம் கொண்டது. அர்த்தநாரீசுவரர் என்ற பெயரின் அர்த்தம் 'அரை பெண்ணாக இருக்கும் இறைவன்' என்பதாகும். அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு அமைந்த கோலம் தான் அர்த்தநாரீசுவரர். சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவமாகும்.
இக்கோவிலில் உள்ள அர்த்தநாரீசுவரர், மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு எந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் தோற்றமானது, அற்புதமான ஒன்றாகும். அர்த்தநாரீசுவரரின் இந்தத் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

கண்டரமாணிக்கம் மருதம் விநாயகர் கோவில்
அனுமனைப் போல வடை மாலை ஏற்கும் மருதம் விநாயகர்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் மிகமிக வித்தியாசமாக தோற்றம் அளிக்கிறார். இந்த விநாயகருக்கு தும்பிக்கை கிடையாது. மனித முகத்துடன் காணப்படும் இந்த விநாயகர், மருதம் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் வேண்டியதைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த இந்த கணபதிக்கு, அனுமனைப்போல வடை மாலை அணிவித்து, பொங்கல் வைத்து மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
தோல் நோய் அகற்றும் விநாயகர்
மகாகவி முத்தப்பர் (1767 - 1829) என்ற கவிஞர் நகரத்தார் மரபில், செட்டிநாட்டில் பிறந்தவர். இளமையிலேயே பாடும் திறமை பெற்றிருந்த முத்தப்பர், குன்றக்குடி முருகன் பேரில் பதிகம் பாடி அருட் புலமை பெற்றார். தமது குல வழக்கமான வணிகத்தில் ஈடுபடாது தமிழை வளர்ப்பதில் ஈடுபட்டார். முருகனின் அருளால் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது. தான் பாடும் பாடல்களால், மழையை வரவைக்கும் கவித்துவம் பெற்றவர்.
மகாகவி முத்தப்பர், இந்த கணபதியை வேண்டி மனமுருகி பாடிய பத்து பாடல்கள் காரணமாக, அவருக்கு இருந்த தோல் நோய்கள் நீங்கினார். இதனால் இன்றும் தோல் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து மருதம் விநாயகரிடம் வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டி இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.