உலகளந்த பெருமாள் கோவில்
பெருமாள் மூன்றடி மண் தானம் கேட்ட திவ்ய தேசம்
பெருமாள் விண்ணையும் மண்ணையும் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்த தலம் தான் திருக்கோவிலூர் திவ்ய தேசம். இத்தலத்து பெருமாளின் திருநாமம் உலகளந்த பெருமாள். இவருக்கு உலகளந்த திருவிக்கிரமன் என்ற திருநாமமும் உண்டு. கருவறையில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். நெடிய திருமேனியுடைய இப்பெருமாள் மரத்தால் ஆனவர். இவர் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். பெருமாளின் காலடியில் தாயார், மிருகண்டு, மகாபலி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு உற்சவர்கள் கொண்ட முருகப்பெருமானின் படை வீடு
பொதுவாக ஒரு கோவிலில் ஒரு உற்சவர் அல்லது சில இடங்களில் இரண்டு உற்சவர்கள் திருமேனி அமையப்பெற்றிருக்கும். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நான்கு உற்சவர்கள் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த நான்கு உற்சவர்களுக்கும் தனிச் சன்னதிகள் இருக்கின்றன.
திருச்செந்தூர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நான்கு உற்சவர்கள்
ஸ்ரீ ஆறுமுகநயினார் (சண்முகப்பெருமான்)
ஸ்ரீ ஜெயந்திநாதர்
ஸ்ரீ அலைவாயுகந்த பெருமான்
ஸ்ரீ குமரவிடங்க பெருமான்
இதில் ஆறுமுகநயினார் வருடத்திற்கு இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் திருவீதி உலா எழுந்தருளுவார். கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் தினசரி தங்க தேர் உலா ஆகியவற்றில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களிலும், பங்குனி உத்திரம் - ஐப்பசி திருக்கல்யாணத்திலும் குமரவிடங்க பெருமான் எழுந்தருளுவார். குமரவிடங்க பெருமானுக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. வைகாசி விசாகம் அன்று மயில் வாகனத்தில் அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளுவார்.
நாகநாதர் கோவில்
கோவில் குளத்தில் இருந்து கேட்கும் இசைக்கருவிகளின் ஒலி
புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள பேரையூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் மதில் சுவர், குளக்கரை மண்டபம் ஆகிய இடங்களில் ஏராளமான நாகர் சிலைகள் இருக்கின்றன.இக்கோவில் குளத்தில், சித்திரை மாதத்தில் இசைக்கருவிகளின் ஒலி கேட்கிறது. அது நாகர்கள் இசைப்பதாக கருதப்படுகிறது.
இக்கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள் பாம்பு போல் வளைந்து, நெளிந்து காணப்படுவது ஆச்சரியமான விசயமாகும்.
இக்கோவிலில் சிவன் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி உள்ளது.இது போன்ற அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.
நாக தோஷம், ராகு கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலம்
நாக தோஷம், ராகு கேது தோஷம் நீங்க இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். திருமணத்தடை நீங்கவும், மழலைச் செல்வம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.
வான்முட்டி பெருமாள் கோயில்
மூன்று பெருமாள்களை தரிசித்த பலன் தரும் கோழிகுத்தி வான்முட்டி பெருமாள்
கும்கோணத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோழிகுத்தி என்னுமிடத்தில் வான்முட்டி பெருமாள் ஆலயம் உள்ளது. இத்தலத்து பெருமாள் பெயருக்கேற்றார் போல 16 அடி உயரத்தில், 6 அடி அகலத்தில் மிக பிரமாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார். வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.
கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால், திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும்.
இந்த திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த அனுமன் சிலையின் உடலை தட்டினால், ஏழுவித சப்தங்கள் கேட்கின்றது. ஆஞ்சநேயரின் உடலின் பல்வேறு இடங்களில் தட்ட, ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சப்தம் கேட்கின்றது.
அருணாசலேசுவரர் கோவில்
யானைதிறைக் கொண்ட விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். கோபுரத்து இளையனார் சன்னதிக்கு அருகில் சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் யானைதிறைக் கொண்ட விநாயகர் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு இந்தப் பெயர் வந்ததின் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
விஜயராகவ பெருமாள் கோவில்
வறுத்த பயறு முளைக்க வைக்கும் மரகதவல்லித் தாயாா்
காஞ்சிபுரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருப்புட்குழி என்னும் திவ்ய தேசம். பெருமாள் திருநாமம் விஜயராகவ பெருமாள்.
திருப்புட்குழி தலத்தின் தாயாா் 'மரகதவல்லி' எனும் திருநாமத்துடன் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாா். 'குழந்தைப் பேறு' இல்லாத அன்பா்களுக்கு மழலை பாக்கியம் அளிப்பதில் மிகச் சிறந்த வரப்ரசாதியாக விளங்குகின்றாா் இந்த அன்னை.
திருப்புட்குழி தலத்தில் உள்ள 'ஜடாயு தீா்த்தத்தில்' குழந்தைப் பேறு வேண்டும் பெண்கள் நீராடி இரவில் வறுத்த பயறினைத் தங்கள் மடியில் கட்டிக்கொண்டு படுக்க, மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவா்களுக்கு மழலைப் பேறு ஏற்படுவது உறுதி என்ற நம்பிக்கை உள்ளது. இதனாலேயே மரகதவல்லித் தாயாருக்கு 'வறுத்தபயறு முளைக்க வைக்கும் தாயாா்' என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.
விசுவநாத சுவாமி கோவில்
சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூரில் வேதாந்த நாயகி சமேத விசுவநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது.
இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு, இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை வேறு எங்கும் தரிசிக்க முடியாது.
இங்குள்ள நவகிரகங்கள் அனைத்தும் நடுவில் உள்ள சூரியனை நோக்கியே உள்ளன.
நின்ற நாராயணன் கோவில்
ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரன் திருமணம் நடந்த திவ்யதேசம்
திருத்தங்கல் திவ்ய தேசம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் நின்ற நாராயணன் பெருமாள் கோவில் 'தங்காலமலை மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு.
மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக் கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள். சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணாசுரனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி,"வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்," என ஒலித்தது. இதைக்கேட்ட வாணாசுரன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப்பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.
காசி விசுவநாத சுவாமி கோவில்
பஞ்ச முக பைரவர்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட்டை என்னும் தலத்தில் அமைந்துள்ளது காசி விசுவநாத சுவாமி கோவில்.
பொதுவாக சிவன் கோவில்களின் காவலராகக் கருதப்படும் பைரவர் நாய் வாகனத்துடன்தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் அவர் இத்தலத்தில் பஞ்ச முகங்களுடன், சம்ஹார மூர்த்தியாக சிம்ம வாகனத்தில் அருள் பாலிக்கிறார், அவருடைய இத்தகைய கோலத்தை நாம் வேறு எந்ந தலத்திலும் காண முடியாது.
திருமணத்தடை உள்ளவர்கள், தொழிலில் பாதிப்பு ஏற்பட்டவர்கள், ராகு திசை தோஷம் உடையவர்கள், எதிரிகளால் அல்லல் படுபவர்கள் போன்றவர்களுக்கு இவர் பரிகார தெய்வமாகத் திகழ்கிறார். மாதத்தின் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பக்தர்கள் பூசணிக்காய், தேங்காய், மிளகு தீபமேற்றி வழிபட்டு தங்களது பரிகார பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
தெய்வநாயகேசுவரர் கோயில்
யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தரும் தேவாரத் தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருஇலம்பையங்கோட்டூர்.
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 13வது தலம். சுவாமியின் திருநாமம் தெய்வநாயகேசுவரர் , அரம்பேஸ்வரர்.
தேவகன்னியர்களான அரம்பையர்கள் வந்து வழிபட்டதால் அரம்பேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் இத்தலம் 'அரம்பையங்கோட்டூர்' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் 'இலம்பையங்கோட்டூர்' என்று மருவியது.
அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின்முத்திரையை அடியார்களுக்கு காண்பிப்பது போல் இல்லாமல், தமது இதயத்தில் வைத்திருப்பதுபோல் காட்சி தருவது சிறப்பு. கல்லால மரத்தின் அடியில் இடக்கரத்தில் ருத்ராட்ச மாலை, திரிசூலம் கொண்டு, வலது பாதம் மேல் நோக்கியும் இடது பாதம் முயலகன் மீதும் இருக்கும் நிலையில் யோக தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.
தியாகராஜர் கோவில்
ஐங்கலக் காசு விநாயகர்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மொத்தம் 84 விநாயகர்கள எழுந்தருளியிர்க்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐங்கலக் காசு விநாயகர், தியாகராஜப் பெருமான் சன்னதிக்கும், வன்மீகநாதர் சன்னதிக்கும் நடுவில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இவர் அழகிய சோழ மன்னன் தந்த காணிக்கையால் உருவாக்கப்பட்டவர். ஒரு கலம் தங்கம், ஒரு கலம் வெள்ளி, ஒரு கலம் செம்பு, ஒரு கலம் வெண்கலம், ஒரு கலம் பித்தளை ஆகிய ஐந்து மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டவர்தான் ஐங்கலக் காசு விநாயகர்.
வைத்தியநாதசுவாமி கோவில்
குழிகளை நவகிரகங்களாக பாவித்து வழிபடும் தேவாரத் தவம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாகவும்
இந்த தலத்திற்கு செல்லலாம்.இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி.
பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.
இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர்.
சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது.
சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
மிளகு பிள்ளையார் கோவில்
மழையை வரவழைக்க பிள்ளையாருககுச் செய்யப்படும் மிளகு அபிஷேகம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.
திருநெல்வேலி மாவட்டத்தின் நீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல பல்வேறு கால்வாய்களும் வெட்டப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமானது கன்னடியன் கால்வாய். இந்த கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது மிளகுப் பிள்ளையாருக்கு மிளகரைத்து அபிஷேகம் செய்தால் மழை பெய்து கால்வாய் நிரம்பும் எஎன்பது ஐதீகம்.
மிளகுப் பிள்ளையாருக்கும் கன்னடியன் கால்வாய்க்கும் உள்ள தொடர்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது.
கேரள மன்னனின் முன் ஜென்ம பலன்
முன்னொரு காலத்தில், கேரள மன்னன் ஒருவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒருநாள் மன்னரைக் காண ஒரு ஜோதிடர் வந்தார். ஜோதிடர் மன்னனின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவனுடைய முன் ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி வேதனைப் படுத்துகிறது என்றார். அதற்கு ஜோதிடர் பரிகாரமாக மன்னன் உருவம் போன்ற அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து அதனை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் மன்னனுடைய முன் ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும் என்று கூறினார்.
மன்னனிடமிந்து பொம்மையை தானம் பெற்ற கன்னட பிரம்மச்சாரி
மன்னனும் ஜோதிடர் கூறியபடியே எள்ளு தானியத்தால் தனது உருவ அமைப்பில் ஒரு பொம்மையைச் செய்து அதனை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அதனை தானம் பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனால் அவனைச் சேர்ந்த பாவமும் தங்களை சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன் வரவில்லை. இதனால் மன்னன் தன்னிடம் தானம் பெறும் அந்தணருக்குப் பல பொன்னும் பொருளும் நிறைந்த முடிப்பை பரிசாகத் தருவதாக கூறி அறிவிப்பு செய்தான். இந்நிலையில் இது பற்றி அறிந்த கன்னட பிரம்மச்சாரி அந்தணன் ஒருவன், மன்னனை சந்தித்து தான் அந்த பொம்மையை பெற்றுக் கொள்வதாகக் கூறினான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன் ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்த பரிசுகளை கொடுத்தான்.
கன்னட பிரம்மச்சாரி உருவாக்கிய கால்வாய்
பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. 'அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது' என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி பூஜையின் பலனில் ஒரு பகுதியை கொடுத்து விட்டான்.
ஆனால் தானம் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது. 'வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே' என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க பொருட்களை பொது நலன் கருதி செலவழிப்பது என்று அவன் முடிவெடுத்தான்.
பொது மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என யோசனைக் கேட்பதற்காக பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.
அகத்தியர் அவனிடம், 'தானத்தில் தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழிப்படி ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு' என்றார்.
அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப் பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.
கன்னடியன் கால்வாய்
அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்து விட்டனர்.
பிள்ளையாருககு மிளகு அபிஷேகம்
அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப் பட்டான். அவன் கவலைப் பட்டது போலவே, ஒரு சமயம மழை பொய்த்ததால் கால்வாய் காய்ந்து போய் விட்டது.
உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது.
தமிழக அரசு கெஜட்டில் மிளகு பிள்ளையார் வழிபாடு
இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.
1916-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் இந்த மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமிநாத சுவாமி கோவில்
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மாறுபட்ட நிலையிலிருந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகன்
மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.
ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.
ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்
மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் சேய்யும்.
வைத்தியநாத சுவாமி கோவில்
திருமலை நாயக்க மன்னரின் வயிற்று வலியை குணப்படுத்திய வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது வைத்தியநாதசுவாமி திருக்கோவில்.
வைத்தியநாதசுவாமி நடத்திய திருவிளையாடல்கள்
இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது போன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் வைத்தியநாதசுவாமி அரங்கேற்றியிருக்கிறார்.
திருமலை நாயக்கரின் வயிற்று வலியை தீர்த்த வைத்தியநாதர்
ஒரு சமயம், மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு 'குன்ம நோயினால்' பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக திருமலை நாயக்கர், மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய தான் வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் . இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் 'பல்லக்கு ஊர்வலத்தில்' திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.
திருமலை நாயக்கர் அமைத்த முரசு மண்டபங்கள்
திருமலை நாயக்கர், மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறிய பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டிய பின் தான், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்வார். அதற்குப் பிறகுதான் உணவருந்துவார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல் மண்டபங்கள் உள்ளதை காணலாம்.
சரணாகரட்சகர் கோவில்
கண் நோய் தீர்க்கும் தலம்
நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
விக்ரம சோழனின் ஆட்சிக் காலத்தில், அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார் என்பவர் திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், அந்த மந்திரி தில்லையாடி திருக்கோவிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான்.
ஆனால் மந்திரி செய்து தர மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது «பரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, இறைவனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான். இதனால் இந்தக் தலத்தின் இறைவன். சரணாகரட்சகர் (சார்ந்தாரைக் காத்த நாதர்) என்ற திருப்பெயர் பெற்றார் இத்தல இறைவனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை லரம் அருளும் பெரியநாயகி அம்மன்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடிப்பூரத்தன்று சந்தான பரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது போன்று நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும்.
எமனேஸ்வரமுடையார் கோவில்
ஆயுளை விருத்தியாக்கும் எமனேஸ்வரமுடையார்
பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் எமனேஸ்வரம். ராமநாதபுரத்தில் இருந்து இத்தல, 37 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பழமையான எமனேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமனேஸ்வரமுடையார். இறைவி சொர்ணகுஜாம்பிகை.
எமதர்மனை மன்னித்து அருளிய தலம்
சிவபக்தனான மார்க்கண்டேயருக்கு அவரது பதினாறாவது வயதில் ஆயுள் முடிந்து விடும் என்பது தலைவிதியாக இருந்தது. இறுதி காலத்தில் அவரது உயிரை பறிக்க எமதர்மர் பூலோகத்திற்கு வந்தார். இதனையறிந்த மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். மார்க்கண்டேயர் திருக்கடையூர் வந்த போது அவரது ஆயுள் முடிவடையயும் தருவாயில் இருந்தது. அதனால் அவர் மீது எமதர்மர் பாசக்கயிறை வீசினார். இதனால் பயந்த மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக் கொண்டார். இதனால் பாசக்கயிறு தவறுதலாக சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான், தனது பணியை சரியாக செய்யாத எமதர்மரை காலால் எட்டி உதைத்தார். இதில் எமதர்மர் பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் வந்து விழுந்தார்.
தனது தவறை உணர்ந்த எமதர்மர், தான் விழுந்த பகுதியில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்னர் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவரது வேண்டுதலுக்கு இணங்க அப்பகுதியில் எழுந்தருளினார்.
திருக்கடையூரில் சம்ஹார மூர்த்தியாக இருந்த சிவபெருமான் இத்தலத்தில் அனுக்கிரஹ மூர்த்தியாக திகழ்கிறார். அதனால் ஆயுள் விருத்தி பெறவும், சனி தோஷம் நீங்கவும் பக்தர்கள், இத்தலத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது மற்றும் எண்பதாம் திருமணங்கள் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இழந்த பதவி மற்றும் செல்வத்தை மீட்க எமனேஸ்வரமுடையாரை பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு முகம் கொண்ட சதுர்முக முருகன்
திண்டுக்கலில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.
மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தகைய நான்கு முகங்கள் கொண்ட முருகனின் தோற்றத்தை நாம் வேறு எந்த தவத்திலும் தரிசிக்க முடியாது. அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள்.
முருகப் பெருமான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்னர் முருகப்பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அதை நினைவு கூறும் வகையில் இங்கே, முருக பெருமான் சதுர்முகத்துடன் இருப்பதாக தல புராணம் கூறுகின்றது.
குங்குமத துகள்களில் தோன்றிய சதுர்முக முருகன்
விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக கடும் தவம் செய்து கொண்டிருந்தார் . அப்போது விசுவாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை, தனக்கு குங்குமப் பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விசுவாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரி பார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில், சிறுமி பாலதிரிபுரசுந்தரி தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்த குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார்.'இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்' என்று விசுவாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள்.
சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விசுவாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோயிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாகக் காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின் இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேன் என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விசுவாமித்ரருக்கு 'பிரம்மரிஷி' பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார்.
செம்பால் அபிஷேகம்
இத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த 'செம்பால் அபிஷேகம்' செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட அபிஷேக நடைமுறை வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள பாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.
வானமாமலை பெருமாள் கோவில்
நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் திவ்ய தேசம்
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நான்குவழிச் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இத்தலத்தின் பெருமைகள் பற்றி நரசிம்ம புராணம், ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக இவரை கொண்டாடுகின்றனர்.
பெருமாளுக்கு தினசரி நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம்
இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் 25 அடி நீளம், 15 அடி அகலமுள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்
இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.
இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.
வைத்தியநாதசுவாமி கோவில்
நாள் பட்ட சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கிறார்கள்.
இறைவி சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சரும நோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த சுந்தராம்பிகை. நாள்பட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈர உடையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.