அமுதகடேசுவரர் கோயில்
அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கும் முருகப் பெருமான்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 'கோடிக்கரை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் 'கோடிக்குழகர்' என்ற பெயர் பற்றது. திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் சென்றபோது கீழே சிந்திய அமுதமே லிங்க வடிவம் பெற்று இத்தலத்து மூலவராக இருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் உள்ளார். அவர் அமிர்தா சுப்பிரமண்யர் என்னும் நாமத்துடன் ஒரு முகம், ஆறு கரங்களுடன், கையில் அமிர்த கலசம் கொண்டு வடக்கு நோக்கிய மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் நவக்கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இராமபிரான் இங்கு வந்து இலங்கையை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக வேதராண்யத்திலிருந்து வரும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இடதுபக்கம் 'இராமர் பாதம்' என்னும் இடம் உள்ளது.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்ட தலம்
கந்தசஷ்டிகவசம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்தான் இயற்றப்பட்டது.இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் பெற்றது.
கந்தசாமி கோயில்
திருப்போரூர் ஆலயத்தின் வித்தியாசமான கொடி மர அமைப்பு
ஆலயங்களில் கொடி மரம் பொதுவாக கோபுரத்தைக் கடந்த பின்தான் அமைந்திருக்கும். ஆனால் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் வித்தியாசமாக,கொடி மரம் கோபுரத்திற்கு முன்னதாக அமைந்துள்ளது.
சண்முகநாதர் கோயில்
முருகன் கோவிலில் சுருட்டு பிரசாதம்
திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சுருட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
சுப்பிரமணியர் கோயில்
குதிரை வாகனத்தில் முருகன்
முருகப்பெருமான் விழாக்காலங்களில் பெரும்பாலும் மயில் வாகனத்தில்தான் பவனி வருவார்.ஆனால் மருங்கூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் உற்சவகாலங்களில் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார்.இத்தலம் கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும்,சசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அறுபடை வீடு
அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில்தான் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார்.மற்ற அறுபடை வீடுகளில் அவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்
தென்காசியிலிருந்து சுமார் 11 கி.மீ, தூரத்திலுள்ள ஆய்க்குடி கிராமத்திலுள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக ஒரு முகத்துடனும்,நான்கு கரங்தளுடனும் தாமரைப் பூவின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.இதில் அரச மரம் சூரியனுக்கும்,வேம்பு அம்பிகைக்கும்,கறிவேப்பிலை சிவனுக்கும், மாதுளை விநாயகருக்கும்,மாவிலங்கு விஷ்ணுவுக்கும் உரியதாகும்.