
முருகநாதேசுவரர் கோயில்
முருகப் பெருமான் வேலும் மயிலும் இல்லாமல் தனித்து நிற்கும் தேவாரத்தலம்
திருமுருகன்பூண்டி, திருப்பூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம். முருகனால் இத்தலத்து சிவபெருமான் பிரதிஷ்டைசெய்யப்பட்டதால், திருமுருகநாதர் என்று அழைக்கப்படுகிறார். இதை விளக்கும் விதமாக, முருகன் சன்னதியில் லிங்கம் ஒன்று உள்ளது. முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு, தனது வேலை, கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் வேலும் மயிலும் இல்லாமல், தனித்து நிற்கிறார்.
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், ஐந்து முகங்கள் முன்புறமும், ஆறாவது முகம், பின்னாலும் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம்” என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுப்ரமணிய சுவாமி அமர்ந்திருப்பது இத்தலத்து தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால், மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
வள்ளியும் தெய்வானையும் ஒருவராக இணைந்து காட்சி தரும் திருப்புகழ் தலம்
முருகனின், ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி, அரக்கோணத்தில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும், ஒரே அம்பிகையாக, கஜவள்ளி என்னும் பெயரில் அருள்கிறார்கள். கஜவள்ளி வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள்.

சுருளிவேலப்பர் கோவில்
சுருளிமலையில் அமைந்துள்ள விபூதி குகை
தேனி மாவட்டம் கம்பம் என்ற ஊரில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலுள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது சுருளிவேலப்பர் கோவில் . இந்த கோவிலை நெடுவேள்குன்றம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.சுருளிவேலப்பர் கோவிலின் அருகே உள்ளது விபூதி குகை, இந்த விபூதி குகையில் ஈர மண் விபூதியாக மாறும் அதிசயம் நிகழ்கிறது.மேலும் இங்கு அள்ள அள்ள விபூதி வந்துகொண்டே இருக்கின்றது.
இத்தலத்தின் மூலவரான சுருளிவேலப்பர் குழந்தையில்லாதவருக்கு இறுதிக் கடன்களை செய்தார். அதனால் இறுதி காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் மூலவர் சுருளிவேலப்பரை தங்கள் குழந்தையாக எண்ணுகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகப் பெருமான் தன் மனைவியருடன் சிவபூஜை செய்த திருப்புகழ் தலம்
வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வயலூர் சுப்பிரமணிய சுவாமிக்குத் தனிப்பெருமை உண்டு. மற்றத் தலங்களில் தாய் தந்தையரை முருகப்பெருமான் தனித்து நின்று பூசை செய்திருக்க, வயலூரில் மட்டும் தெய்வயானையுடனும், வள்ளியுடனும் சேர்ந்து பூசை செய்தார்..தாய் தந்தையரை வணங்காதவர்களுக்கு இறைவனருள் கிட்டாது என்பது வேதவாக்கு. முருகப்பெருமான், இங்கு தன் கையிலுள்ள வேலால் சக்தி தீர்த்தம் அமைத்து,அதில் நீராடி தன் மனைவியருடன் பெற்றோரைப் பூசித்து வழிபட்டார்..

கொடுங்குன்றநாதர் கோயில்
வயோதிக கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
பிரான்மலை தலத்தில், முருகப்பெருமான் தனிச்சன்னதியில் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகன் சன்னதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சன்னதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடனக்காட்சி காட்டியதாக ஐதீகம்.

சிவாநந்தீஸ்வரர் கோயில்
முருகப் பெருமான் ஜெப மாலை,அமுத கலசம் தாங்கி காட்சிதரும் தேவாரத் தலம்
தேவாரத் தலமான திருக்கள்ளில் கோயிலில் உள்ள முருகப் பெருமான் வலது கையில் ஜெப மாலை, இடது கையில் அமுத கலசம் ஆகியவை தாங்கி நின்ற கோலத்தில், பிரம்ம முருகன்' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றார். முருகப் பெருமானது சன்னதி, சுவாமி சன்னதிக்கும், அம்மன் சன்னதிக்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் இருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சிவானந்தேசுவரர் கோயில்
முருகப்பெருமானின் தோஷம் நீங்கிய தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது.பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. மூலவர் 'பிரணவேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'சிவானந்தேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மூலவரின் சன்னதி முன்பு முருகப்பெருமான் சின்முத்திரையுடன், கண்களை மூடிக் கொண்டு தியான நிலையில் இருக்கின்றார். பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டால் அதிலிருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை

சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தரும் அறுபடைவீடு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
கோவிலின் கருவறையில் கல்யாண திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.முருகப் பெருமான். அமர்ந்த நிலையில் இடது கையை தொடையில் அமர்த்தி, வலது கையால் அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் நாரத முனிவர் ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில், முருகப் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறார். கருவறையில் முருகனின் இடப்பக்கம், தெய்வானை ஒரு கால் மடக்கி அமர்ந்து, கைகளில் மலருடன் காட்சி தருகிறார். இக்கருவறையின் மேலே முருகனைச் சுற்றி சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்ரி, வித்தியாதரர்கள்m இந்திரன் முதலானோர் காட்சி தருகின்றனர். தெய்வானை அருகில் திருமனச் சடங்கினை நடத்தும் நான்முகன், கலைமகளுடன் சிறிய உருவில் உள்ளார். முருகன் பாதத்திற்குக் கீழ் மேடையில், யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் அண்டாபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

படிக்காசுநாதர் கோயில்
சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் முருகப்பெருமான்
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருஅரிசிற்கரைபுதூர். தற்போது 'அளகாபுத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. சூரபதுமனை அழிக்க முருகப்பெருமான் போருக்குக் கிளம்பியபோது, மகாவிஷ்ணு அவருக்கு தன்னுடைய சங்கு, சக்கரத்தைக் கொடுத்ததால், இத்தலத்து முருகக் கடவுள் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
கந்தசாமி கோயில்
முருகப்பெருமான் அசுரர்களோடு வான்வெளியில் போரிட்ட தலம்
முருகப்பெருமான் அசுரர்களோடு நடத்திய போர் தரைவழி, கடல்வழி, வான்வெளி என்ற மூன்று நிலைகளிலும் நடந்தது..இதில் தரைவழிப் போர் திருப்பரங்குன்றத்திலும், கடல்வழிப் போர் திருச்செந்தூரிலும் நடைப்பெற்றது. வான்வெளிப் போர் நிகழ்ந்த தலம்தான் திருப்போரூர். போர் நடந்ததால் இத்தலத்திற்கு திருப்போரூர் (திரு + போர் + ஊர்) என்ற பெயர் வந்தது. கந்த சஷ்டி கவசத்தில் வரும் 'சமராபுரி வாழ் சண்முகத்தரசே' என்று வரும் வரிகளிலுள்ள (சமர் என்றால் போர், புரி என்றால் ஊர் என்று அர்த்தம்) சமராபுரி என்னும் சொல் இத்தலத்தையே குறிக்கின்றது.

அக்னீஸ்வரர் கோயில்
முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக காட்சி தரும் தேவாரத் தலம்
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு தலத்தில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார்.

பழமலைநாதர் கோயில்
முருகன் சிவனை பூஜித்த தலம்
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக விருத்தாச்சலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
சிவகுருநாதசுவாமி கோயில்
ஒருமுகம், நான்கு கைகளுடன் காட்சி தரும் முருகப்பெருமான்
ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகப்பெருமான், சிவபுரம் தலத்தில் ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும்.

அமுதகடேசுவரர் கோயில்
அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கும் முருகப் பெருமான்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 'கோடிக்கரை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் 'கோடிக்குழகர்' என்ற பெயர் பற்றது. திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் சென்றபோது கீழே சிந்திய அமுதமே லிங்க வடிவம் பெற்று இத்தலத்து மூலவராக இருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் உள்ளார். அவர் அமிர்தா சுப்பிரமண்யர் என்னும் நாமத்துடன் ஒரு முகம், ஆறு கரங்களுடன், கையில் அமிர்த கலசம் கொண்டு வடக்கு நோக்கிய மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் நவக்கிரகங்கள் வரிசையாக அமைந்துள்ளன. இராமபிரான் இங்கு வந்து இலங்கையை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக வேதராண்யத்திலிருந்து வரும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இடதுபக்கம் 'இராமர் பாதம்' என்னும் இடம் உள்ளது.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
கந்த சஷ்டி கவசம் இயற்றப்பட்ட தலம்
கந்தசஷ்டிகவசம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்தான் இயற்றப்பட்டது.இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் பெற்றது.
கந்தசாமி கோயில்
திருப்போரூர் ஆலயத்தின் வித்தியாசமான கொடி மர அமைப்பு
ஆலயங்களில் கொடி மரம் பொதுவாக கோபுரத்தைக் கடந்த பின்தான் அமைந்திருக்கும். ஆனால் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் வித்தியாசமாக,கொடி மரம் கோபுரத்திற்கு முன்னதாக அமைந்துள்ளது.
சண்முகநாதர் கோயில்
முருகன் கோவிலில் சுருட்டு பிரசாதம்
திருச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராலிமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சுருட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
சுப்பிரமணியர் கோயில்
குதிரை வாகனத்தில் முருகன்
முருகப்பெருமான் விழாக்காலங்களில் பெரும்பாலும் மயில் வாகனத்தில்தான் பவனி வருவார்.ஆனால் மருங்கூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் உற்சவகாலங்களில் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார்.இத்தலம் கன்னியாகுமரியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும்,சசீந்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சத்தியகிரீஸ்வரர் கோயில்
முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அறுபடை வீடு
அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில்தான் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார்.மற்ற அறுபடை வீடுகளில் அவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்
தென்காசியிலிருந்து சுமார் 11 கி.மீ, தூரத்திலுள்ள ஆய்க்குடி கிராமத்திலுள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக ஒரு முகத்துடனும்,நான்கு கரங்தளுடனும் தாமரைப் பூவின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.இதில் அரச மரம் சூரியனுக்கும்,வேம்பு அம்பிகைக்கும்,கறிவேப்பிலை சிவனுக்கும், மாதுளை விநாயகருக்கும்,மாவிலங்கு விஷ்ணுவுக்கும் உரியதாகும்.