மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ முருகன்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ள மோகனூரில் உள்ள காந்தமலை என்ற குன்றின் மேல் அமைந்திருக்கிறது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற தலம் என்பதால் மகனூர் என்று அழைக்கப்பட்ட இத்தலம் பின்னர் மோகனூர் என்று மருவியது. பழனியைப் போலவே இத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். தனது வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் தோற்றம் அளிக்கிறார். இப்படி ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் இருக்கும் முருகனை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இந்தக் கோவிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கின்றன. அவை 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் குறிக்கின்றது.
தல வரலாறு
முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால், தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து பழனி நோக்கிப் புறப்பட்டார். அவரைப் பின்தொடர்ந்த பார்வதிதேவி 'முருகா நில்' என்று அழைத்தார். தாயின் சொல் கேட்டு முருகன் நின்றார். தாயின் அறிவுரை சொல் கேட்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பார்வதி தேவி அழைத்தபோது முருகன் நின்ற இடம் தான் இத்தலம் என்று தல வரலாறு கூறுகின்றது.
பிரார்த்தனை
செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி வேண்டிக்கொள்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உடையவர்கள் இவரை வழிபட்டால் அது நிவர்த்தி ஆகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து முருகனிடம் வேண்டிக் கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.