களக்காடு வரதராஜ பெருமாள் கோவில்
மூலிகைகளாலும், படாச்சாரமும் கலந்து தயார் செய்யப்பட்ட பெருமாள் விக்கிரகம்
வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் கருட சேவை சாதிக்கும் சிறப்பு
திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள, களக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகத் திகழும் இக்கோவில். சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இங்கு மூலவராக வீற்றிருக்கும் வரதராஜ பெருமாள் சிலை மூலிகைகளாலும், படாச்சாரமும் அதாவது மரமும் கலந்து தயார் செய்யப்பட்ட விக்கிரகமாகும். 6 அடி உயரமுள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் சன்னதிக்குத் தென்புறம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் அலமேலுமங்கை, பத்மாவதி தாயாருடன் கிழக்கு நோக்கியே தனி சன்னதி கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும். இந்தத் தலத்தில் ராஜகோபுரம் இல்லை அதற்குப் பதிலாக வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கடாஜலபதி சன்னதிகளில் இரு கோபுரங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை அன்றும், பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழாவின் 5ம் நாள் இரவிலும், 2 கருட வாகனங்களில் தனித்தனியாக வரதராஜப் பெருமாளும், வெங்கடாஜலபதியும் வீதி உலா வருவது இத்தலத்தின் மற்றும் ஒரு தனிச்சிறப்பாகும்.
விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில்
நாகத்துடன் காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ., தொலையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் அமைந்துள்ளது சிவந்தியப்பர் கோவில். இறைவன் திருநாமம் சிவந்தியப்பர். இறைவியின் திருநாமம் வழியடிமை கொண்டநாயகி.
பொதுவாக தட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி, தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இப்படி நாகத்துடன் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
ருத்ராட்சத்தாலான திருமேனி கொண்ட அபூர்வ அம்பிகை
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.
இத்தலத்து அம்பிகையின் திருமேனி ருத்ராட்சத்தாலான, சுயம்பு திருமேனி ஆகும். அம்பிகையின் திருமேனி சிற்பி வடித்த சிலை இல்லை. இந்த விக்கிரகம் இமய மலையின் ஒரு பகுதியில், கோமாதி மலையில் இயற்கையாகவே கண்டு எடுக்கப்பட்ட சிலை ஆகும், இதனால்தான் கோமதி அம்பாள் என்று பெயர் வந்தது. இந்த ருத்ராட்ச திருமேனியை பால் அபிஷேகம் செய்யும் போது தெளிவாக தரிசிக்கலாம். கருவறையில் அம்பிகை அழகே உருவாக, புன்முறுவல் பூத்த முகம் கொண்டு, ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறுகரத்தை தொங்கவிட்ட படியும், சற்றே இடை நெளிந்து, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறான்.
அம்பிகை திருமண பாக்கியமும், குழந்தை பேறும் அருளும் வரப்பிரசாதி
இக்கோவில் முக்கியமான ஒரு கல்யாணத் தலமாகும். இக்கோவிலில், சுவாமி இடது புறமும் அம்பாள் வலது புறமும் இருப்பதனால் இங்கு திருமணம் செய்தால் புத்திர பாக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
இந்த அம்பிகை சிறந்த வரப்பிரசாதி. தங்கள் திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், பக்தர்கள் இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணத்தடை நீங்க பரிகாரம்
நீண்ட நாட்களாக திருமணத் தடைபடும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய பரிகாரமாக, இக்கோவிலில் ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் வைபோகம் நடக்கும் அன்று தங்களுடைய ஜாதகத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து, சுவாமிக்கு பட்டு வேஷ்டியும், துண்டும், அம்பாளுக்கு பட்டுப் புடவையும், குங்குமமும். தாலியும் தாம்பூலத்தில் வைத்து சுவாமி ஊரை வலம் சுத்தி வரும் பொழுது சுவாமியுடன் சுற்றி வந்து, கோவிலில் வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சாத்தி. பொட்டுத்தாலியை அம்பாளின் கழுத்தில் அணிவித்து, அன்னதானம் செய்து வழிபட்டால், நீண்ட நாட்களாக தடைப் பெற்ற திருமணம் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து திருமணம் செய்து வைத்து வழிபட்டதால், இந்த புண்ணியம் உங்கள் குழந்தைகளுக்கும் சேரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்
இக்கோவியில் ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கும் அன்று பட்டு புடவையும், அனைத்து வகையான வளையல்களும், அனைத்து வகையான சீர்வரிசை பொருட்களையும் அம்பாளின் பாதத்தில் தாம்பூலத்தில் வைத்து, அன்னதானம் செய்து வழிபட்டால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். அம்பாளை உங்கள் குழந்தையாக பாவித்து வளைகாப்பு நடத்தி வழிபட்டதால், உங்கள் குழந்தைகளுக்கும் இந்த புண்ணியம் சேரும்.
அம்பாசமுத்திரம் அகத்தீசுவரர் சுவாமி கோவில்
அன்னமிடுதல் உற்சவம் - அன்னப் படையலில் பதியும் அகத்தியரின் பிரம்படி தடமும், காலடிச் சுவடும்
திருநெல்வேலியில் இருந்து 40 கி. மீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது அகத்தீசுவரர் சுவாமி கோவில். கருவறை யில் அகத்தீசுவரரும், தெற்கு நோக்கிய கருவறையில் அகத்தியரின் மனைவி லோப முத்தரை அம்பாளும் அருள்கின்றனர். மூன்றடி உயர திருமேனியராய் நின்ற கோலத்தில் அருள்கிறார் அகத்தீசுவரர். வலக் கரம் சின்முத்திரை காட்ட, இடது கரத்தில் சுவடியை ஏந்தியிருக்கிறார். ஜடாமகுடதாரியாய், மார்பில் லிங்க மாலை திகழ, முப்புரிநூல் அலங்கரிக்க, சிவசொரூபமாகக் காட்சி தருகிறார் அகத்தீசுவரர். அவரின் எதிரில் நந்தி அருள்கிறார். லோப முத்தரை அம்பாள் தனது கையில் மலர் ஏந்தி அருள்பாலிக்கிறாள்.
இந்தக் கோவிலில் பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர்.`அந்த அன்னப் படையலில், அகத்தியரின் வாக்குப்படி அவரது காலடிச் சுவடும், பிரம்படி தடமும் பதிந்திருப்பது, இத்தலத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சியாகும்.
சிவபெருமான் பார்வதி திருமணத்தைக் காண அகில உலகமும் கைலாயத்தில் கூடிய போது சிவபெருமான், உலகைச் சமன்படுத்த, அகத்தியரை தென்புலத்துக்கு அனுப்பினார். பாபநாசம் தலத்தில் அகத்தியருக்கு சுவாமியின் திருக்கல்யாண தரிசனம் கிடைத்தது. பிறகு, அம்பாசமுத்திரம் எனும் தலத்தை அடைந்த குறுமுனிவர், அங்கே ஒரு புளிய மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவ பக்தர்கள் பலரும் அகத்தியரை தரிசிக்க வந்தனர். தியானம் கலைந்த அகத்தியர், அவர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் பக்தர்களில் ஒருவரிடம் 'எமக்குப் பசி எடுக்கிறது. அமுது அளித்து பசி தணிப்பீரா?' எனக் கேட்டார். அகத்திய முனிவருக்கு அன்னமிடுவது பெரும் பாக்கியம் எனக் கருதிய அந்த அன்பரும், தம் இருப்பிடத்துக்குச் சென்று அன்னம் தயார் செய்து எடுத்து வந்தார். ஆனால் அவர் வருவதற்குச் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. அகத்தியர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார். அன்பர் மிகவும் மனம் கலங்கினார். அகத்தியரை மனதார துதித்து வழிபட்டார்.
அப்போது அவர் முன் தோன்றிய அகத்தியர், 'வருந்தாதே! தற்போது நேரமாகிவிட்டதால் நான் இங்கிருந்து புறப்பட வேண்டும். பங்குனி மாதம் 29-ம் நாள் வேடர் வடிவில் வருவேன்; நீ இடும் அன்னத்தைப் புசிப்பேன். அதற்கு அடையாளமாகப் படைக்கப் படும் அன்னத்தின்மீது என்னுடைய காலடிச் சுவடும், பிரம்படிச் சுவடும் தெரியும்!' எனக் கூறி மறைந்தார்.
அகத்தியர் அருளியபடியே, அங்குள்ள பக்தர்கள் பங்குனி 29-ம் நாளன்று, அம்பையில் உள்ள தீப தீர்த்தத்திலிருந்து 21 குடம் தீர்த்தம் எடுத்து வந்து திரு மஞ்சனம் செய்து அகத்தியருக்கு அமுது படைத்து வழிபட்டனர். அகத்தியரும் தாம் வாக்களித்தபடி, பக்தர்கள் படைத்த அன்னத்தில் திருநடனமிட்டுப் பிரம்படிச் சுவடும் கால்சுவடும் காட்டி அருளினார். இவ்வாறு அவர் அருள்புரிந்த இடத் தில், அகத்தியருக்கு அழகிய ஆலயம் அமைத்தனர் பக்தர்கள். தமிழகத்தில் அகத்தியருக்காக அமைந்த கோயில்களில் தனிச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது இந்த ஆலயம்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் அன்னமிடுதல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. பங்குனி 29-ம் நாள், பக்தர்கள் அகத்தியருக்குப் படையலிடுகின்றனர். '`அந்த அன்னப் படையலில், அகத்தியரின் பிரம்படி தடமும், காலடிச் சுவடும் பதிந்திருப்பதைக் நாம் தரிசிக்கலாம். பின்னர் அந்த படையல் உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பிரார்த்தனை
இந்தத் தலத்துக்கு வந்து அகத்தியரைத் தியானித்து, `ஓம் அகஸ்தீஸாய நம!' என்ற மந்திரத்தை உச்சரித்து, நாம் உண்ண வேண்டிய மருந்தை உட்கொண்டால் நோய் விரை வில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தோல் நோய், சுவாசக் கோளாறு, நரம்புப் பிரச்னைகள், மனநோய் பாதிப்பு ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்ட அன்பர்கள் பலரும் இங்கு வந்து அகத்தியரை வழிபட்டு நலம் பெற்று உள்ளார்கள்.
தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில்
ராகு- கேது உடன் இருக்க அருள் பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேது உடன் இருக்க ஸ்ரீசக்தி விநாயகர் அருள் பாலிக்கிறார் . ஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊரில் கோவிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாக எண்ணிய ஊர்மக்கள் அதையடுத்து கூடிப் பேசி, இந்த விநாயகர் கோவிலைக் கட்டினார்கள்.விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்கள் கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் .
பிரார்த்தனை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும்.
பிட்டாபுரம் அம்மன் கோவில்
பிட்டு நைவேத்தியமாக ஏற்கும் பிட்டாபுரத்தி அம்மன்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு 'புட்டாத்தி அம்மன்' என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குகின்றாள்.
கருவறையில் பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய பீடத்தில், வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி காட்சியளிக்கிறாள்.
இந்த அம்மனுக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி அம்மன் என்ற பெயர் வந்துள்ளது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரி செய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களை குணப்படுத்தும் அம்மன்
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் அறுபத்து நான்கு விதமான நோய்கள், சீர் தட்டுதல் போன்றவற்றிற்கு கைகளில் வேர் கட்டி, நெற்றியில் மையிடப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிற மதத்தை சேர்ந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் நோய் தீர்க்க வழிபடும் அம்மன்
இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து அம்மனை வழிபட்டு வேர் கட்டி, மையிட்டு செல்வது இக் கோவிலின் சிறப்பம்சமாகும். பொதுவாக குழந்தைகள் பிறந்தால் தீட்டு என்றும் பதினாறு நாட்களுக்கு அந்த குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு பிறந்த குழந்தையை கூட அழைத்து வந்து வேர் கட்டி வழிபடலாம்.
பிரார்த்தனை
இவள் சன்னதியில் தினமும் காலை மற்றும் இரவு பூஜைகளின் போது மந்திரம் ஓதப்பட்ட புனித நீரானது சங்கில் வைத்து பக்தர்களின் மீது தெளிக்கப்படும். இதனால் சகல திருஷ்டிகளும், பீடைகளும், தீய சக்திகளும் நீங்குவதாக நம்பிக்கை. மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.
அச்சங்குட்டம் காளி கோவில்
அக்னி ரூபமாக இருக்கும் அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் சுரண்டை என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது அச்சங்குட்டம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள காளி கோவில் பல அதிசயங்கள் நிறைந்த கோவிலாக இருக்கின்றது.
இக்கோவிலில் மூலவர் காளி அம்மன் அக்னி ரூபமாக இருப்பதால், அலங்காரம் செய்யும் போது காளி அம்மன் சிலையில் வியர்க்கிறது. வியர்வையை துடைக்க துடைக்க அது வடிந்து கொண்டிருப்பது தான் அதிசயம், மேலும் அலங்காரம் செய்து முடித்த பிறகும் சிலையின் முகத்தில் வியர்வை வருவதும் முக்கிய அம்சமாகும். காளி அம்மனின் இரண்டு பக்கமும், முத்தாரம்மன் மற்றும் மாரியம்மன் மண் வடிவில் இருக்கிறார்கள். காளியம்மன் அபிஷேகத்தின் போது மண் குவியல் வடிவில் இருக்கும் இரண்டு அம்மன் பீடங்கள் கரைவதும் சில தினங்களில் மீண்டும் அவை பழைய நிலைக்கு வளர்வதும் மற்றொரு அதிசயமாகும்.
கோவில் வரலாறு
இக்கோவில் அமைந்துள்ள இடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஊத்துமலை ஐமீனின் கணக்கு பிள்ளைக்கு சொந்தமாக இருந்துள்ளது. அவரிடம் வேலை பார்த்தவர்கள் தங்களை காப்பாற்ற தங்களுக்கு ஒரு தெய்வம் வேண்டும் என்று கருதி காளி அம்மனை மண்ணில் பிடித்து அம்மனுக்கு பனை ஒலையால் ஒரு குடில் அமைத்து புரட்டாசி மாதம் கொடை விழாவும் நடத்தி, வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் அந்த பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட, மாடக்கண்ணு என்பவரின் கணவில் தோன்றிய அம்மன் கோவில் முன்பு ஒரு இடத்தை காட்டி அங்கு கிணறு தோண்டினால் எந்த கோடையிலும் வற்றாத தீர்த்தம் கிடைக்கும் என்று வாக்கு அளித்தார். அதனை தெடர்ந்து பெண்களே ஒன்று சேர்ந்து ஒரு கிணற்றை தோண்ட இன்று வரை எந்த கோடையானாலும் இந்த கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றாமல் உள்ளதும் ஒரு அதிசயம்.
70 ஆண்டுகளுக்கு முன்பு குத்தாலிங்கம் என்ற பார்வையிழந்தவரின் கனவில் அம்மன் தோன்றி நான் சிலை வடிவில் பூமிக்கு அடியில் ஒர் இடத்தில் இருப்பதாகவும் அந்த இடத்தையும் காண்பித்து விட்டு மறைந்தாள், இது குறித்து அவர் ஊர்மக்களிடம் தெரிவிக்கும் போது யாரும் அவர் கூறுவதை நம்பவில்லை. ஆனால் அவர் நண்பர் அய்யாதுரை மட்டும் அதை நம்பினார். பின் குத்தாலிங்கமும், அய்யா துரையும் அம்மன் சொன்ன இடத்திற்கு சென்று மண்ணை தோண்டி பார்க்க 3 அடியில் ஒரு சிலை கிடைத்தது. பின்னர் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அம்மனுக்கு கோயில் கட்ட முடிவு செய்து, இக்கோவிலை கட்டினார்கள். கருவறையில், சாந்த சொருபமாக அமைதியாக சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு மகுடம் தரித்த காளியாக சூலம், குங்குமக் கிண்ணம், நாகம் புரளும் உடுக்கை, என சிம்ம வாகனத்தல் காட்சி கொடுக்கிறாள்.
இந்த காளி தேவியை நம்பி வந்து சன்னதியில் விழுந்து வணங்கும் போது, கேட்ட வரங்களை அள்ளி தருபவளாகவும், கிராம மக்களுக்கு காவலாகவும் இருக்கின்றாள் என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவெண்காடர் சிவன் கோவில்
சிவலிங்கத் திருமேனி வடிவில் சிறியதாகவும், பெரியதாகவும் மாறித் தோன்றும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 38 கி. மீ தூரத்தில் திருநெல்வேலி - பொட்டல்புதூர் சாலையில் பாப்பான்குளம் எனும் ஊரில் திருவெண்காடர் சிவன் கோவில்
அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் திருவெண்காடர். இறைவி வாடாகலை நாயகி.
வடக்கே வெண்பனி உறைந்த கயிலை மலையில் உறையும் ஈசனே இங்கு வந்து எழுந்தருளி இருப்பதால் இவருக்கு திருவெண்காடர் என்று பெயர்.
இந்தக் கோவிலின் சிவலிங்கத் திருமேனியானது சந்திரகாந்தக் கல் என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும். கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிவலிங்கமானது சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரிவது ஒரு அதிசயமாகும். மூலவர் சந்திரகாந்த கல்லில் செய்யப்பட்ட லிங்கத் திருமேனி என்பதால் குறிப்பிட்ட விநாடிக்கு ஒரு முறை சில நீர் துளிகள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.
பாபநாசநாதர் கோவில்
பக்தனின் தாம்பூல எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மை
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் நமச்சிவாயக் கவிராயர். இவர் சிங்கை உலகம்மை பிள்ளைத் தமிழ், சிங்கை உலகம்மை கலித்துறை அந்தாதி, சிங்கை உலகம்மை கொச்சகக் கலிப்பா, சிங்கை உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, சிங்கை உலகம்மை சந்த விருத்தம், சிங்கை சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
நமச்சிவாயக் கவிராயர் பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீது பெரும் பக்தியும் பேரன்பும் செலுத்தி வந்தார். குறிப்பாக உலகம்மை மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்.
இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாபநாசத் கோவிலுக்குச் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது உலகம்மை இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது, வாயிலிருந்து தெரித்து அம்பிகையின் ஆடையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான்.
அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். கவிராயரின் தாம்பூல எச்சிலைத் தான் அணியாக ஏற்றுக் கொண்டதாகக் கூறி மறைந்தாள்.விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் தங்கப் பூச்செண்டு ஒன்றை வைத்துப் தங்க கம்பிகளால் சுற்றிக் கட்டச் சொன்னான். மன்னன், நமச்சிவாயக் கவிராயரிடம், தாங்கள் அம்பிகைதாசர் என்பது உண்மையானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க நார்கள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும் என்றான். அவரும் உலகம்மை அந்தாதி எனும் நூலை இயற்றிப் பாடினார். 'அபிராமி அந்தாதி'யைப் போல் இந்த நூலும் மிகுந்த சிறப்புடையது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன.
'விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே'
எனும் பாடலை பாடி முடித்த சமயம் படபடவென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு உலகம்மையின் கையிலிருந்து நமச்சிவாய கவிராயர் கரத்திற்குத் தாவி வந்தது. மன்னன் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாய கவிராயர் பாதத்தில் விழுந்து வணங்கினர். மன்னன் அவருக்குப் பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தான். இன்றும் அந்த தங்கப் பூச்செண்டை நாம் உலகம்மையின் கையில் காணலாம்.
இந்நிகழ்ச்சியின் காரணமாக நமச்சிவாயக் கவிராயரின் பெண் வழிச் சந்ததியினர் பாபநாசம் கோவிலுக்குச் சென்றால் அர்ச்சகர்கள் உலகம்மையின் கையிலிருக்கும் பூச்செண்டை எடுத்து அவர்களுக்கு தருவது வழக்கமாக இருந்தது.
மஞ்சள் பிரசாத மகிமை
உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.
கைலாசநாதர் கோவில்
மூன்று கொம்புகள் முளைத்த அதிசயத் தேங்காய்
திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 35 கி. மீ தொலைவில் உள்ளது தென்திருப்பேரை. சுவாமி கைலாசநாதர். இறைவி அழகிய பொன்னம்மை. சோழ தேசத்தில் திருச்சி அருகில் திருப்பேரை என்ற தலம் உள்ளது. அதே போல் தெற்கே பாண்டியநாட்டில் இருந்த இந்தத் தலமான திருப்பேரை 'தென்திருப்பேரை' என்று அழைக்கப்பட்டது. இத்தலம் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும்.
மூன்று கொம்புகள் முளைத்த தேங்காய்
அம்பாள் சன்னிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. முற்காலத்தில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் ஒரு சமயம், இந்தத் தென்திருப்பேரை பகுதிக்கு வந்தார். தனக்கு குடிக்க இளநீர் கொண்டு வரச் சொல்லித் தன் சேவகர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை ஏற்றச் சேவகர், அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் பறிக்க முற்பட்டார். அங்கிருந்த விவசாயியோ அந்தத் தோப்பில் விளையும் இளநீர் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக்கூடியது என்று சொல்லி இளநீரை பறிக்க விடாமல் தடுத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு வந்து, 'இந்தத் தோப்பிலுள்ள இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? இப்போ பறிச்சு போடப்போறியா இல்லையா' என்று விவசாயியை அதட்டினார். கலெக்டரின் உத்தரவைத் தட்ட முடியாத விவசாயி, ஒரு இளநீரை பறித்துப் போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருந்தன. அதனை கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டும் அல்லாமல், தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த முக்கொம்பு தேங்காய், ஒரு கொம்பு ஒடிந்து, தற்போது இரண்டு கொம்புகளுடன் மட்டுமே காட்சித் தருகிறது.
சுவாமி கைலாசநாதரை வணங்கினால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழலாம்.
கிழக்கு நோக்கிய தனி கருவறையில் அழகிய பொன்னம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்டபடியும் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறாள். இந்த அம்மையை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
கைலாசநாதர் கோவில்
சூரியன்,சந்திரன், குரு பகவான், சுக்கிரன் குதிரை வாகனத்தில் காட்சி தரும் அபூர்வக் கோலம்
தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்மன் அழகிய பொன்னம்மை என்றும் அழைக்கப்படுகின்றார். இச்சிவாலயம் தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும். நவக்கிரகங்களில் புதன் வழிபட்டத் தலமாகும்.
தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும்.இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
குதிரை வாகனத்தில் சூரியன்,சந்திரன், குரு பகவான், சுக்கிரன்
நவகிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரை ஆகும்.. ஆனால் இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் காட்சி தரும் சூரியன், சந்திரன், குரு பகவான், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களுமே குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலும், குரு பகவானும், சுக்கிர பகவானும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சந்திர பகவான் பத்து குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இது வேறு எந்தத் தலத்திலும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.
ஆறு கரங்களுடன் காட்சி தரும் பைரவர்
இங்குள்ள பைரவருக்கு ஆறு கரங்களுடன் காட்சி தருவது மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். இவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியும், நாய் வாகனம் இல்லாமலும் காட்சி தருகிறார்.சிறப்பு வாய்ந்த இந்தப் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் பூஜை செய்தால் தொழில் விருத்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புதன் தோஷ நிவர்த்தித் தலம்
தங்கள் ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்களும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவர்களும் சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.