மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்
மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கே வெகு அருகாமையில் அமைந்துள்ளது, மயிலாப்பூரின் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.மயிலாப்பூர் தலத்தில், பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. 'பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள்.
கருவறையில் வடக்கு திசை நோக்கி, கோலவிழி அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.இந்த அம்மனின் தனிச்சிறப்பே அவளின் கோலவிழிகள்தான். அவளின் கண்களைப் பார்த்தாலே நம்முள் பரவசம் ஏற்படும். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அம்மன் காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த கோவிலை, பத்ரகாளி அம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்.
மயிலையின் காவல் தெய்வம்
கோல விழியம்மன் மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம்மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழாவானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்தி மூவர் நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.
முக்கிய திருவிழாக்கள்
மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா, சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் பத்தாம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.
பிரார்த்தனைகள்
27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். . 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.
இந்த அன்னை குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீக்கும் அற்புத அன்னையாக விளங்குகிறாள். நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது. இந்த அம்மனுக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என விதம்விதமான அலங்காரங்களும் செய்கிறார்கள்.