வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்
ஊமையாக இருந்த வாணி (சரசுவதி) பாடிய தலம்
வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி.இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி, அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சரசுவதி தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன், வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு ஒரு சமயம் கர்வம் ஏற்பட்டது. மும்மூர்த்திகளில் தானே உயர்ந்தவன் என்று தனது மனைவியான சரசுவதி தேவியிடம் தெரிவித்தார்.அதைக் கேட்டு சரசுவதி தேவி, அவரது எண்ணம் தவறு என்று சுட்டிக் காட்டி அவரை பரிகாசம் செய்தாள். அதனால் கோபமுற்ற பிரம்மதேவன், தனது மனைவி சரசுவதியை ஊமையாகும்படி சாபமிட்டார். அதனால் வருத்தமுற்ற சரசுவதி, தனது சாபம் தீர சிருங்கேரி பகுதியில் தவம் மேற்கொண்டதாகத் தல வரலாறு கூறுகிறது.
வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், இக்கோவிலில் தங்கி சிவனையும், பார்வதியையும் வழிபட்டனர். கலைவாணி தானே மானுடப் பெண் வடிவில் உணவு சமைத்து, அதிதியாக வந்த சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் உணவளித்து உபசரித்தாள். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள் செய்து அவளைப் பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
காசிப முனிவரின் மனைவி அதிதி, புனர்பூசம் நட்சத்திரம்தோறும் இத்தலத்தில் விரதமிருந்து வழிபட்டு தேவர்களைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. புனர்பூச நட்சத்திரம் மற்றும் மாத பவுர்ணமி தோறும் இங்கு சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகமும், சரசுவதி தேவிக்கு வெண்ணிற நறுமணப் பூக்களால் பூச்சொரியலும் நிகழ்த்துதல் சிறப்பானதாகும். எனவே இக்கோவில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பரிகார தலமாக விளங்குகின்றது. புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். அன்ன தோஷம் விலக,ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக்காக அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இங்குள்ள சரசுவதியை வழிபடுவது சிறப்பு..