வாணியம்பாடி அதிதீசுவரர் கோவில்
ஊமையாக இருந்த வாணி (சரசுவதி) பாடிய தலம்
வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி.இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் சரசுவதி தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில், மடியில் வீணையுடன், வலது காலைத் தொங்க விட்டு, இடது காலை மடித்து ஒய்யாரமாக வீற்றிருக்கிறாள்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு ஒரு சமயம் கர்வம் ஏற்பட்டது. மும்மூர்த்திகளில் தானே உயர்ந்தவன் என்று தனது மனைவியான சரசுவதி தேவியிடம் தெரிவித்தார்.அதைக் கேட்டு சரசுவதி தேவி, அவரது எண்ணம் தவறு என்று சுட்டிக் காட்டி அவரை பரிகாசம் செய்தாள். அதனால் கோபமுற்ற பிரம்மதேவன், தனது மனைவி சரசுவதியை ஊமையாகும்படி சாபமிட்டார். அதனால் வருத்தமுற்ற சரசுவதி, தனது சாபம் தீர சிருங்கேரி பகுதியில் தவம் மேற்கொண்டதாகத் தல வரலாறு கூறுகிறது.
வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், இக்கோவிலில் தங்கி சிவனையும், பார்வதியையும் வழிபட்டனர். கலைவாணி தானே மானுடப் பெண் வடிவில் உணவு சமைத்து, அதிதியாக வந்த சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் உணவளித்து உபசரித்தாள். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள் செய்து அவளைப் பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
காசிப முனிவரின் மனைவி அதிதி, புனர்பூசம் நட்சத்திரம்தோறும் இத்தலத்தில் விரதமிருந்து வழிபட்டு தேவர்களைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. புனர்பூச நட்சத்திரம் மற்றும் மாத பவுர்ணமி தோறும் இங்கு சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகமும், சரசுவதி தேவிக்கு வெண்ணிற நறுமணப் பூக்களால் பூச்சொரியலும் நிகழ்த்துதல் சிறப்பானதாகும். எனவே இக்கோவில் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பரிகார தலமாக விளங்குகின்றது. புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். அன்ன தோஷம் விலக,ஓட்டல் தொழில் செய்பவர்கள், வியாபார விருத்திக்காக அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, இங்குள்ள சரசுவதியை வழிபடுவது சிறப்பு..
ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோவில்
அனுமன் சனிபகவானை இரு கால்களால் அழுத்தி நிற்கும் அபூர்வகோலம்
வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள ஆம்பூர் நகரத்தில் பெரிய ஆஞ்சநேயர் கோவில். பழங்காலத்தில் ஆமையூர் என அழைக்கப்பட்ட இந்த ஊர் பெயர் மருவி இன்று ஆம்பூர் என வழங்கப்படுகிறது. இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது
இக்கோவில் கருவறையில், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய, கோலத்தில் காட்சி தருகிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையினை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும், பெரிய ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது. ஆஞ்சநேயரின் வால் , தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சௌகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளில் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.
புராண வரலாறு
சீதையை மீட்க, இராமபிரான் இலங்கை மீது போர்த் தொடுத்தார். அப்போரில் லட்சுமணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையைக் சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியைத் தன் காலில் கொண்டு வந்து தன் முழு பலத்தைத் தந்த ஆஞ்சநேயர், அவரை அழுத்தினார். வலி தாங்க முடியாத சனி, தன்னை விட்டு விடும்படியும், மன்னித்து விடும்படியும் வேண்டியதுடன், ராமரின் துதியையும் பாடினார். இராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார், அனுமன். பின்னர் இலங்கை சென்று சேர்ந்தார். அதன்பின் சஞ்சீவி மலை மூலிகையால் லட்சுமணன் நலம் பெற்றான் என்பது புராணம். இந்தக் கோலமே, இந்த ஆலயத்தின் மூலவராக விளங்குகின்றது.
பிரார்த்தனை
இவ்வாலயத்திற்கு ஆம்பூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிவாழ் மக்களும் வந்து தரிசித்துச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் தீபமேற்றி வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏழரை சனி நடப்பவர்கள், சனி தோஷம் உள்ளவர்கள், சனியால் கெடுபலனை அனுபவிப்பவர்கள் இத்தலம் வந்து பெரிய ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால், சனி பகவானால் ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து விடுபடலாம். அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு வழங்கும் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.