திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
அபய முத்திரையுடன் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்
திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும், லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தலம் திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில், தட்சிணாமூர்த்தி சிவமுத்திரையுடன்தான் காட்சியளிப்பார். ஆனால், இக்கோவிலில் அவருடைய தோற்றம் வித்தியாசமாக இருக்கின்றது. இங்கு தட்சிணாமூர்த்தி தனது வலது கரத்தில் அபய முத்திரை காட்டி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதனால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல தோஷங்களும் நீங்கப் பெற்று, குழந்தைகளுக்கு கல்விச் செல்வமும் குழந்தை இல்லாதவரகளுக்கு குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமையன்று எண்ணெய், பால், தேன் அபிஷேகம் செய்து தயிர் சாதம், சுண்டல் நெய்வேத்தியம் செய்து 11 நெய் தீபமிட்டு விளக்கேற்ற வேண்டும். 11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் பக்தர்களின் நம்பிக்கை.
தகவல், படங்கள் உதவி: திரு. பாலசுப்ரமணியன் குருக்கள், ஆலய அர்ச்சகர்