கோடீசுவரர் கோவில்
சகல பாவங்களும் தொலைந்து போகும் திருக்கோடிக்காவல்
மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டதால், இத்தல இறைவனின் திருநாமம் 'கோடீசுவரர்’ ' என்றும், ஊர் 'திருக்கோடிக்கா' என்றும் ஏற்பட்டது. மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்றன. ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட பெருமை உடையது இத்தலம்.காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்று வரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள். இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். தலத்தின் தீர்த்தமான் காவிரியில் கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.லோக காந்தா என்ற பெண்மணி, தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவள் தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யம தூதர்கள்,, அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் சென்றார்கள். சிவ தூதர்கள், அவர்களை வழிமறித்தனர். உடனே யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்.சிவபெருமான், தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிட்டார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று கூறி யமதர்மராஜன், இத்தலத்தை விட்டு நீங்கினான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைந்தாள்.