விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்
பீடத்தின் வடிவில் காட்சி தரும் அபூர்வ முருகன்
விருத்தாச்சலம் – சேலம் சாலையில், விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். குளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே முருகன் தோன்றியதால் இவர் 'குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் 'கொளஞ்சியப்பர்' என திரிந்தது.
கருவறையில் எழுந்தருளி இருக்கும் முருகன், உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்டவர். ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.
பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்குப் பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேடம். குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் கோவிலுக்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்; பொட்டு கூட வைக்க மாட்டார்கள். இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு, பொட்டு வைக்கிறார்கள்.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருந்தாகும் முருகனின் விபூதி பிரசாதம்
ப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க, அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபட்டு, முருகனின் பிரசாதமான விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள், கட்டிகள், முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும், மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக் கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ்வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது. இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.
புதுமையான 'பிராது கட்டுதல்' என்ற பிரார்த்தனை நடைமுறையும், பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்ற ராஜினாமா கட்டணம் செலுத்தும் முறையும்
இத்தலத்தில் பக்தர்கள் தம்குறை தீர்க்க வேண்டி செய்யும் பிராது கட்டுதல் என்ற நேர்த்திக்கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. இந்த பிராது கட்டுதல், நாம் நமது மேலதிகாரிகளுக்கு எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல அமைந்துள்ளது. பிராது கட்டுவதற்காக கோயிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகள், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில், முருகக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எந்த ஊரிலிருந்து வருகிறோமோ, அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 25 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.
கோரிக்கை நிறைவேறினால், இந்த தேதியில் நான் வந்து வைத்த பிராது கட்டுதல் நிறைவேறியதால், அதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தலாம்.
குழந்தை வரம், கடன் தொல்லை, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
பழமலைநாதர் கோயில்
விநாயகப் பெருமானின் இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் ஆழத்து விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமைந்திருப்பது, திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், .கோவில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக, ஆழத்து விநாயகர் வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிசிக்க முடியும். இவருக்கு தனியாக கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபாடு செய்தபின், படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்."
பிரளயகாலேசுவரர் கோவில்
வெள்ள நீரை உறிஞ்சுவதற்காக எதிர்திசை திரும்பியிருக்கும் நந்தி
விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்; அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்ட, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும்படி ஆணையிட்டார். உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்குப் புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலை நோக்கி உள்ளார்.
பழமலைநாதர் கோவில்
சிவபெருமான் சந்தோஷத்திற்காக நடனமாடிய தேவாரத் தலம்
விருதாச்சலம் கடலூரில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேவாரத் தலம்.சுவாமியின் திருநாமம் விருத்தகிரீசுவரர்.அம்மன் திருநாமம் விருத்தாம்பிகை.இத்தலத்தின் புராண பெயர் திருமுதுகுன்றம் ஆகும்.ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
பழமலைநாதர் கோயில்
முருகன் சிவனை பூஜித்த தலம்
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக விருத்தாச்சலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.