அர்த்தநாரீஸ்வரர் கோவில்
தேன் அபிஷேகத்தின்போது சிவலிங்கத்தில் தெரியும் அம்மன்
விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு இடை நெளித்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களைக் காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிசேக பூசையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக காட்சி தருகிறார். மற்ற அபிசேகம் நடக்கும் போது இலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.
பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ள தலம்
பொதுவாக நரசிம்மர் கோவிலில், உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால், விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி இருக்கிறார்கள்.இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால், பெருமாள் இங்கு மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.
அரசலீஸ்வரர் கோவில்
சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.