திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
நாகங்களை திருமேனியில் தரித்திருக்கும் அபூர்வ சர்ப்ப கால பைரவர்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.
இந்தத் தலத்தில் சேத்திர பைரவர், சர்ப்ப கால பைரவர் என்று இரண்டு பைரவர்கள் அருள் பாலிக்கிறார்கள். சேத்திர பைரவர் வாகனத்துடனும் தற்பகால பைரவர் வாகனம் இல்லாமலும் எழுந்தருளி இருக்கிறார்கள். சர்ப்ப கால பைரவர் தனது கையில் ஒரு நாகத்தையும், வலது கால் மற்றும் இடது கால் இரண்டிலும் நாகங்கள் சுற்றத் தொடங்கி, திருமேனி முழுவதும் படர்ந்து இருக்கின்றன. இப்படி திருமேனி முழுவதும் சர்ப்பங்கள் பின்னி படர்ந்திருக்கும் காலபைரவரை வேறு தலத்தில் நாம் தரிசிப்பது அரிது.
இந்த சர்ப்ப கால பைரவரை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை விலகும். பாம்பு சம்பந்தப்பட்ட கெட்ட கனவுகள் நின்று விடும். தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமி என்று போற்றப்படுகிறது. பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய, துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும். சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
சுவாமி கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கும் அபூர்வ வடிவமைப்பு
கருவறையில் சிவபெருமானுடன் பார்வதி அருவமாக இருக்கும் ஒரே தலம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி.
பொதுவாக சிவாலயங்களில் சுவாமி, அம்பிகை சன்னதியின் கருவறையின் மேல் விமானம் இருக்கும். ஆனால் இத்தலத்திலோ சுவாமி விமானத்தின் மேல் இரட்டை விமானம் இருக்கும் வடிவமைப்பு வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது. மேலும் சிவபெருமானின் லிங்கத் திருமேனியானது கருவறையின் வலது பக்கம் சற்று ஒதுங்கி இருக்கும். இதற்கு காரணம், இறைவன் தனது இடது பக்கத்தில் அருவமாக இருக்கும் பார்வதி தேவிக்கு இடம் கொடுத்திருக்கிறார். சுவாமி, அம்பாளுக்கு தனித்தனி விமானம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், இந்த கருவறையின் மேல் இரட்டை விமானம் இருக்கின்றது. தமிழகத்தில், இப்படி இரட்டை விமானம் கருவறையின் மேல் இருக்கும் அமைப்பு, வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்
திருமணத்தடை நீக்கும் வராகி அம்மன்
கோவில் உரலில், விரலி மஞ்சள் இடித்து, வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர். இறைவியின் திருநாமம் ஒப்பிலாநாயகி. திருநெடுங்களம் என்றால் 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பொருள்.
இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் சப்த கன்னியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சப்த கன்னியரில் ஐந்தாவதாக விளங்கும் வராகி அம்மன் சிறந்த வரப்பிரசாதி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள் வராகி அம்மன்.
இத்தலத்து வராகி அம்மன் தடைகளை நீக்கி திருமணம் வரம் கைகூட அருள்பவள். சப்த கன்னியரின் அருகிலேயே, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சோழர் காலத்து உரல் ஒன்று உள்ளது.
வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தின்போது சிற்ப உரலில், விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். இந்த வழிபாட்டு முறை இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். திருமண வரம் வேண்டும் ஆண், பெண் என இருபாலரும், பெரும் அளவில், இத்தலத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
பிரார்த்தனை
வளர்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடுவது மிகுந்த நற்பலன்களை தரும். பகை, வறுமை, பிணி, தடைகள் அகலும். பில்லி, சூன்யம், மாந்திரீகம் விலகி ஓடும். எதிரிகள் ,பகைவர்கள், தீயோர் விலகிடுவர்.
நெடுங்களநாதர் கோயில்
சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள்
சிவாலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் இருக்கும் பீடத்தில் சூரியன் நடுவில் இருப்பார். அவரை சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் திருச்சியை அடுத்த தேவாரப்பாடல் பெற்ற திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் தன் இரு தேவியருடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மற்ற எட்டு கிரகங்கள், சூரியனை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இப்படி சூரியனை நோக்கி உள்முகமாக திரும்பி இருப்பது ஒரு அரிதான அமைப்பாகும்.