திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் அருவமாக எழுந்தருளி இருக்கும் தலம்

கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஆகாய மார்க்கமாக வரும் சமயபுரம் மாரியம்மன்

தர்ப்பை புல்லாலான ஆகாச மாரியம்மன்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் ஆகாச மாரியம்மன் கோவில். ஆனால் இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்த ஆட்சி செய்கிறாள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக விழா நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்கிரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள். இதன் பின்னணியில் சமயபுரம் மாரியம்மனின் திருவிளையாடல் உள்ளது.

திருநாரையூரில், 600 ஆண்டுகளுக்கு முன்பு, கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார், பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வரும் பழக்கத்தை உடைய அவர்கள், ஒருமுறை சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவு தங்கினர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​சமயபுரம் மாரியம்மன் இளம்பெண் வடிவம் எடுத்து வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றினாள். வியாபாரி அவள் கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அடுக்க ஆரம்பித்தார். ஆனால் வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்தது. வியாபாரி குழப்பமடைந்து, இளம்பெண்ணின் கைகளை அலங்கரிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

வியாபாரி , 'தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விடுகிறதே. உனக்குத் தகுந்த வளையல்கள் போட வேண்டும் என்றால் தயவு செய்து நீ எங்கள் ஊருக்கு வா. இரண்டு கைகள் நிறைய வளையல்களைப் போட்டு விடுகிறேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுகிறேன். எங்கள் ஊருக்கு வா தாயே!' என்று அன்புடன் வேண்டினார்.

அதற்கு அந்த இளம்பெண், 'உங்கள் ஊருக்கு வந்தால்தான் வளையல் போடுவாயா? இப்போதே உங்கள் ஊர்காரர்களிடம் எழுந்தருள்கிறேன்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அருகில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர், 'எங்களை மன்னித்துவிடு தாயே' என்று கோவிலை நோக்கிக் கைகூப்பினார்.

விடிந்ததும் காலையில் கோவில் குருக்கள் அந்த வியாபாரியிடம்,""ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? இந்தாருங்கள் பொற்காசு. உடைந்த வளையல்களுக்கு உரிய தொகை. இதை உங்களிடம் சமயபுரத்தாள் கொடுக்கச் சொன்னாள்' என்றார். மேலும், அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் பிரசாதமாக குங்குமத்தை நெற்றியில் பூசினார் குருக்கள். அம்மை கண்டவர்கள் உடனே குணமடைந்து எழுந்தார்கள்.

கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், மற்றவர்களிடம் கூறவே, அவர்கள் அனைவரும் தங்களுக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், 'தாயே, எங்கள் ஊருக்கு வந்து அருளவேண்டும்' என்று மனமுருக வேண்டினார்கள்.

சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், 'உங்கள் ஊர் எது?' என்று கேட்க, 'நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநாரையூர்" என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ""முல்லைக்கும் மல்லிக்கும், முன்கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநாரையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பிவிடுவேன்' என்று அருளினாள்.

சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநரையூர் தலம் வந்து, பத்து நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம். இந்த விழா தற்பொழுது பத்து நாள்களுக்கு மேல் நடந்து பதிமூன்றாம் நாள் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் கொடுத்து வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர, அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார். விளக்கு மட்டுமே அம்மன் என்று வழிபடப்படுகிறது. வைகாசி அமாவாசைக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி அம்மன் சிலையை உருவாக்கி, மல்லிகைப் பூக்கள் மற்றும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கின்றனர். உடையக்கூடிய தர்ப்பை புல்லால் மூர்த்தி கட்டப்படும் கோவிலை நாம் வேறு எங்கும் காண முடியாது.

ஒவ்வொரு நாளும் புதிதாக தர்ப்பை புல் சேர்க்கப்படும், இதனால் வடிவம் படிப்படியாக வளரும். மற்றும் அலங்காரங்களும் தினமும் மாற்றப்படும். லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அவள் சித்தரிக்கப்படுகிறாள், கடைசி நாளில் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

Read More
திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

சனி பகவான் குடும்ப சமேதராய் காட்சியளிக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநறையூர் ராமநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தனி.

தசரதர் தனக்கு ஏற்பட்ட நீண்ட கால நோய் தீர, இத்தல இறைவனையும், சனி பகவானையும் வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும், தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர், தீர்த்தக்குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.

இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. மூலவருக்கு கொடிமரம் இல்லாமல் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

இத்தலத்தில் உள்ள திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில் பற்றிய முந்தைய பதிவு

மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/mb5tbfg25mz9x8ldjdbnxaewpe5w4l

Read More
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்

திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்

மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்

கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாபம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.

மகாலட்சுமி அவதரித்த தலம்

மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநறையூர்.. இத்தலத்தில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, ‘மழலை மகாலட்சுமி’ என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் அவதரித்தாள். அவளுக்கு 'வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு மேதாவி மகரிஷியும் வளர்த்தார்.அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர். இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் நாச்சியா கோயிலுக்கு செல்கின்றனர். அதனால் இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது

இத்தலத்தில் பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை. மாசி மகம் புனித நீராடி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்...பித்ரு தோஷம் நீங்கும்

Read More
சௌந்தரநாதர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சௌந்தரநாதர் கோவில்

பக்தனுக்காக நைவேத்தியத்தை சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார்சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், தேவாரத்தலமான திருநாரையூர் உள்ளது. இறைவன் திருநாமம் சௌந்தரநாதர். இறைவி திரிபுரசுந்தரி..தேவாரப் பாடல்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி இத்தலத்தில் பிறந்தவர். இவரது தந்தை சௌந்தரநாதர் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். நம்பியாண்டார் நம்பியின் உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் அவமானப் படக்கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.

Read More