சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
அரிதான கோலத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டிருப்பார். ஆனால், கடலூரில் இருந்து 18 கி.மீ., தூரத்திலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில் கோஷ்டத்தில் (சுவாமிசன்னதி சுற்றுச்சுவர்) அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, இரு கால்களையும் மடக்கி, பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இது ஒரு அரிதான காட்சியாகும்.
ஒருசமயம் இத்தலத்தில் வாழ்ந்த விவசாய தம்பதியினரான பெரியான் மற்றும் அவன் மனைவியின் பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், அவர்கள் வயலில் வேலை செய்ததற்கு கூலியாக கொடுத்த உணவை கால்களை மடக்கி தரையில் அமர்ந்து உண்டார். அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான் தட்சிணாமூர்த்தி இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார்.
இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் வராது என்றும், மேலும் விவசாயம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.