சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
வள்ளியும், முருகனும் கைகோர்த்து திருமணக் கோலத்தில் நிற்கும் அபூர்வ காட்சி
சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். ராமனிடம், அவருடைய மைந்தர்களான லவனும், குசனும் சண்டை போட்ட இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்று இத்தல வரலாறு கூறுகின்றது. சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும். அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும், முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை மற்ற முருகன் தலங்களில் காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்தது. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடக்கின்றது.
மரகதக்கல்லால் ஆன மயில் மற்றும் தெய்வச்சிலைகள்
இக்கோவில் சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலவர், நவக்கிரகம் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். கொடிமரத்துக்கு அருகில் இந்த மரகத மயில் வீற்று இருக்கின்றது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதக்கல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
பிரார்த்தனை
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
மீனாட்சி அம்மன் கோயில்
மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு
மதுரை மீனாட்சி அம்மனும் சென்னை அருகே புழல் பக்கத்தில் உள்ள சிறுவாபுரி உண்ணாமுலை அம்மனும் மரகதக் கல்லால் ஆனவர்கள்.இத்தகைய மரகதக்கல்லால் ஆன அம்மனை வணங்கினால் புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும் ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.