பாடலீஸ்வரர் கோவில்
பார்வதி தேவி அரூபமாக தவம் செய்த இடம்
பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத் தலமான கடலூரில் அமைந்துள்ளது பாடலீஸ்வரர் கோவில். இத்தலத்தின் முற்காலத்திய பெயர் திருப்பாதிரிப்புலியூர். பாதிரியை தலவிருட்சமாக கொண்டதாலும் ,புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர் ) வழிப்பட்டதாலும் (பாதிரி + புலியூர் ) இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது .ஒருமுறை பார்வதி தேவி தன் திருக்கரங்களால் இறைவனின் கண்களை மூடினாள். இதனால் உலகம் இருண்டு அணைத்து இயக்கங்களும் நின்று போயின.இதனை கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் .இறைவன் தாயாரை பூலோகம் சென்று, அங்குள்ள சிவதலங்களில் பூஜிக்கும்படியும் அவ்வாறு பூஜை செய்யும் போது எந்த தலத்தில் இடது கண் மற்றும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார் .அதுபோல் தாயார் பூலோகம் வந்து சிவத்தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்துவந்தார் . அப்போது பாதிரி வனமாக திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண் மற்றும் தோள் துடித்தது ,பார்வதி தேவி இத்தலத்திலேயே தங்கி அரூபமாக தவம் செய்த இடம், இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில் 'அருந்தவநாயகி' சன்னதியாக உள்ளது . இச்சந்நதியில் விக்கிரகம் ஏதும் இருக்காது .பீடம் மட்டுமே இருக்கும்.
வேணுகோபாலசுவாமி கோயில்
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார். சுமாா் 6 அடி உயரத்தில், இருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இருக்கரங்களில் புல்லாங்குழல் பற்றி, வலது திருப்பாதத்தை சற்றே மடித்து, ஒய்யாரமாகக் காட்சி தரும் ஶ்ரீவேணுகோபாலனின் எழிற் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்..மூங்கிலால் வேயப்பட்டதைப் போன்ற அழகிய புல்லாங்குழலில் வேணுகோபாலன் தன் விரல்களை லாவகமாக அதன் துளைகளில் பதித்து, கன்னங்கள் குவிய தன் திருப்பவளச் செவ்வாயால் குழலூதும் பேரழகுக் காட்சியைக் காண இரு கண்கள் போதாது.
பாடலீஸ்வரர் கோவில்
சிவன் சன்னதியில் பள்ளியறை
அனைத்து சிவ ஆலயங்களிலும், அம்பாள் சன்னதியில்தான பள்ளியறை அமைந்திருக்கும். ஆனால் தேவாரப் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் (கடலூ்ர்) சிவாலயத்தில் பள்ளியறை சிவன் சன்னதியில் உள்ளது, இங்கு மற்ற ஆலயங்களைப் போல சுவாமி அம்மனின் சன்னதியிலுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கு பதிலாக, அம்மன் தானே சிவன் சன்னதியி லுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.