
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில்
சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் ராமபிரானின் ஆபூர்வ தோற்றம்
ராம லட்சுமண சகோதரர்கள் வில்லும் அம்பும் ஏந்தி ஏரியை காத்த அதிசயம்
சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில். மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிட ப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் வகுளாரண்ய ஷேத்திரம் என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அப்பகுதி மதுராந்தகம் என்றும், கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்களம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இக்கோவில் கருவறையில் ராமபிரான் எட்டு அடி உயர திருமேனியுடன், சீதை மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுடன் காட்சி தருகிறார். சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண் டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். பொதுவாக கோவில்களில் ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ராமபிரான் சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் தோற்றமானது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக ராமபிரான் இவ்வாறு காட்சி தந்ததார். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இந்த தாயார் சன்னதி திருப்பணியின் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஏரி காத்த ராமர்
சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். கோவிலுக்கு பின்புறம் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து அடிக்கடி கரை உடைப்பு ஏற்படும். இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஆங்கிலேய கலெக்டர் லயோனல் பிளேஸ் ஏரிக்கரையை பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோவிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவர் 'உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், இவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் தாயார் சன்னதி திருப்பணியை செய்து தருகிறேன்,'என்றார். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி ஏரிக்கரையில் காவலாக நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த கலெக்டர் லயோனல் பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்திருந்து ஏரிக்கரையை காத்து நின்றனர் என்று அறிந்தார். பின்பு, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. 'இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது' என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம். ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, 'ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ராமநவமி பஞ்ச அலங்காரம்
ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். ராமநவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும்.

கச்சேரி விநாயகர் கோயில்
கச்சேரி விநாயகர்
மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும். விநாயகருக்கு கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம் ’என்ற பெயரில், இவருக்கு சித்திரை மாதம் முழுவதும் தினசரி இளநீர்அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் நடைபெறுகிறது.