பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி திருவிழா
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. 10 நாட்கள்
நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைபெறுகின்றது. 10-ஆம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று கற்பக விநாயகருக்கு ராட்சதக் கொழுக்கட்டை
படைக்கப்படுகின்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே செய்யப்படும் சந்தனகாப்பு அலங்காரம்
விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒரு சில கோவில்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும்
பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும், மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செய்வார்கள். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வார்கள். தேரோட்டம் நடைபெறும் அதே நேரத்தில் மூலவர் கற்பக விநாயகருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால், அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்குறுணி கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ராட்சத கொழுக்கட்டை தயாரித்து, நைவேத்யம் செய்வார்கள். 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து சுட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு, மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவார்கள். பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து, மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வார்கள். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர், நகரத்தார். ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து பிரசாதமாகக் கொடுப்பர்கள்.
கற்பக விநாயகா் கோவில்
விநாயகப் பெருமானின் ஐந்தாவது படைவீடு
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
விநாயகப் பெருமானின் ஐந்தாம் படைவீடு பிள்ளையார்பட்டி. .காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு அவர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பக விநாயகா் 6 அடி உயரத்தில் காணப்படுகிறார்.இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பாகும். சிவலிங்கத்தை கையில் ஏந்தி, சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால், தீட்சையும் ஞானமும் கிடைக்கும். இவ்விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளதும், இவர் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதும், இடது கரத்தை கடி ஹஸ்தமாக தொடையில் வைத்திருப்பதும் இவரது சிறப்புத் தோற்றமாகும்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினாலே இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள தீட்சா கணபதியை சென்று வணங்கிய பலன் கிடைக்கும். இங்கு 3 சிவலிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 அம்பிக்கைகள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும். இத்தலத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவே பிரதான திருவிழா ஆகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.