தென்காசி காசி விசுவநாதர் கோவில்
கோபுர வாசலில் இரண்டு எதிர் திசைகளில் காற்று வீசும் அதிசயம்
தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை.
இந்தக் கோவில் ராஜகோபுரம் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை திறனுக்கும், பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்கும் ஒரு சான்றாக விளங்குகின்றது. ஒன்பது நிலையும் 175 அடி உயரமும் கொண்ட இக்கோவில் கோபுரம், கி.பி.1456-ல் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டு, கி.பி.1462-ல் குலசேகர பாண்டியரால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும். பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோவிலுக்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கிலிருந்து கிழக்காக, அதாவது கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக, வீசுகின்றது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று, கிழக்கில் இருந்து மேற்காக வீசும் . அதாவது பக்தர்களின் பின்புறத்தில் இருந்து கோவிலுக்குள் தள்ளுவது போல, காற்று வீசுகிறது.
காற்றை எதிர் திசையில் திருப்புவதற்கு எந்த தடுப்பும் இல்லாத நிலையில், ஒரே நேர்கோட்டில் காற்று, இரண்டு எதிர் திசையில் வீசும்படி கோபுரத்தை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் மதிநுட்பத் திறனை எடுத்துக் காட்டுகின்றது. இப்படி, கோவில் கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும், பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசும் சிறப்பானது வேறெந்த கோவிலிலும் கிடையாது.
அர்த்தநாரீஸ்வரர் கோவில்
இனிப்பு,புளிப்பு என இரட்டை சுவையுடன் விளங்கும் தலவிருட்சம்
தென்காசிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள், புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள, மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்
தென்காசியிலிருந்து சுமார் 11 கி.மீ, தூரத்திலுள்ள ஆய்க்குடி கிராமத்திலுள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக ஒரு முகத்துடனும்,நான்கு கரங்தளுடனும் தாமரைப் பூவின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.இதில் அரச மரம் சூரியனுக்கும்,வேம்பு அம்பிகைக்கும்,கறிவேப்பிலை சிவனுக்கும், மாதுளை விநாயகருக்கும்,மாவிலங்கு விஷ்ணுவுக்கும் உரியதாகும்.