திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
கோவில் விமானத்தில் 27 நட்சத்திரங்கள் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. இக்கோவில் மூலத்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம். எனவே தாங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று இக்கோவிலில் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெருமானின் பெயர் வில்வ நாதேஸ்வரர் என்பதால் இங்கு வில்வம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதை உட்கொண்டால் மந்த புத்தி நீங்கும் . அத்துடன் ஞானமும் கிடைக்கும்.
திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை சிவபெருமானிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து சிவபெருமானையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இத் திருத்தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி திருவல்லம் என்றானது.
இக்கோவிலில் விநாயகர், கருவறையில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். அதனால் இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர், பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.