திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

திருநறையூர் ராமநாத சுவாமி கோவில்

சனி பகவான் குடும்ப சமேதராய் காட்சியளிக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநறையூர் ராமநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தனி.

தசரதர் தனக்கு ஏற்பட்ட நீண்ட கால நோய் தீர, இத்தல இறைவனையும், சனி பகவானையும் வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும், தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர், தீர்த்தக்குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல்கிறார்கள். அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.

இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. மூலவருக்கு கொடிமரம் இல்லாமல் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

இத்தலத்தில் உள்ள திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில் பற்றிய முந்தைய பதிவு

மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்

https://www.alayathuligal.com/blog/mb5tbfg25mz9x8ldjdbnxaewpe5w4l

Read More
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்

திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்

மகாலட்சுமி மழலையாய் அவதரித்த தேவாரத்தலம்

கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருமாறி, சாபம் பெற்ற நரன் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.

மகாலட்சுமி அவதரித்த தலம்

மகாவிஷ்ணுவை திருமணம் செய்வதற்காகவே மகாலட்சுமி மனித உருவில் முனிவரின் மகளாக அவதரித்த தலம்தான் திருநறையூர்.. இத்தலத்தில் மகாலட்சுமிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளது அவதார தலமென்பதால் இவள், குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். எனவே, ‘மழலை மகாலட்சுமி’ என்றழைக்கப்படும் இவளுக்கு பாவாடை, சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த மகரிஷி வணங்காமல் இருந்தாலும் அவர் பத்தினி மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க அருள் செய்ய வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். சிவன் திருமாலிடம் மேதாவி மகரிஷியின் விருப்பத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டார். மஹாவிஷ்ணு கூறியதின் பேரில் மகாலட்சுமியும் ஒரு பங்குனி மாத, உத்திர நட்சத்திரத்தில் தடாகத்தின் தாமரை மலரில் அவதரித்தாள். அவளுக்கு 'வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு மேதாவி மகரிஷியும் வளர்த்தார்.அவளை வளர்த்து திருமணப் பருவத்தில் மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டார். அவ்வாறே சிவன், பார்வதி இருவரும் முன்னின்று மஹாவிஷ்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தனர். இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்து அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத்தலமும் கருதப்படுகிறது.எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல்பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் நாச்சியா கோயிலுக்கு செல்கின்றனர். அதனால் இந்த கோவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது

இத்தலத்தில் பௌர்ணமி தினங்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி யாகம் செய்து வழிபட்டால் அரசாளும் யோகம் வரும் என்பது நம்பிக்கை. மாசி மகம் புனித நீராடி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும்...பித்ரு தோஷம் நீங்கும்

Read More