திண்டுக்கல் அபயவரத ஆஞ்சநேயர் கோவில்
மார்பில் சிவலிங்கமும், கால்களில் பாதரட்சையும், இடுப்பில் கத்தியும் கொண்டு காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்
திண்டுக்கல் நகரில், மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் அபயவரத ஆஞ்சநேயரின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.
ராமாவதாரத்தின் போது, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.
கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வழிபாடு
தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக, இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்
பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் காட்சி தரும் மாரியம்மன்
திண்டுக்கல் மலைப்பகுதி திண்டு போல் இருப்பதால்தான் இவ்வூர், திண்டுக்கல் என்று பெயர் பெற்றது என்பது ஒரு வரலாறு. திண்டுக்கல் மலைக்கோட்டை உருவான போதே அம்மனும் அவதரித்ததால் இங்கிருக்கும் அம்மன் 'திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகின்றாள்.தமிழகத்தின் 300 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கின்றது. 1700ம் ஆண்டுகளில் திப்பு சுல்தான், தன் படை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கிய இம்மாரியம்மனின் வழிபாட்டிற்கு என்று ஒரு பீடம் அமைத்து கொடுத்தார். திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக இக்கோவில் விளங்குகின்றது. எனவே இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என மும்மதத்தவர்களும் இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
இக்கோவில் கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி மற்ற தெய்வங்களை காட்டிலும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இருபது நாட்கள் நடைபெறும். இக்கோவில் மாசி திருவிழாவின் போது, வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்வாக மாரியம்மன், பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். அம்மனின் காளி, மச்ச,கூர்ம,கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி உள்ளிட்ட கோலங்கள் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.
அம்மனிடம் கேட்ட வரங்களுக்கு நன்றியாக பக்தர்கள், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிழாவின் போது உருண்டு கொடுத்தல் , பூக்குழி இறங்குதல் , தீச்சட்டி எடுப்பது , பால் குடம் எடுத்தல் , முளைப்பாரி எடுத்தல் , மாவிளக்கு போடுவது போன்ற நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அபிராமி கோவில்
இரண்டு மூலவர் சன்னதிகள் கொண்ட கோவில்
திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் அபிராமி கோவில். பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் பழைய காலத்து பெயர். இதற்கு திண்டீச்சுரம் என்ற பெயரும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவர் சன்னதிதான் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில், இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டு இறைவன்களின் திருநாமம் காளகத்தீசுவரர் , பத்மகிரீசுவரர். அம்பிகைகளின் திருநாமம் ஞானம்பிகை, அபிராமியம்பிகை.
ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோவில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீசுவரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீசுவரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த பத்மகிரீசுவரர், அபிராமி அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோவிலாகக் கட்டப்பட்டது. தற்போது இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். இப்பகுதியில் 'அபிராமி கோயில்' என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், 'அபிராமா அம்பிகை' என்பதாகும். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. 'அபிராமா' என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும். இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது.
பிரார்த்தனை
ராகு, கேது தோஷம் நீங்க, செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க, இழந்த வேலை மீண்டும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
தலைவெட்டி விநாயகர் கோயில்
தலைவெட்டி விநாயகர்
திண்டுக்கல் அருகேயுள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் 'தலை வெட்டி விநாயகர்’ உள்ளார்.ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில்'தன் தலையை நீக்கித் தனத்தை எடு' என்று ஒரு வாசகம் இருந்ததாம்.அதன் படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம்.அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம்,கோவில் கிணறு வெட்டப் பயன்படுத்தினார்களாம்.அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.