உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள், இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு, காளஹஸ்தி சென்று வந்த பலனைப் பெற முடியும். இதனால் தான் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
நவகிரகங்களில், சனீஸ்வரருக்கு உரிய வஸ்திரம் கருப்பு நிறம் . எனவே, சனீஸ்வரருக்கு அனைத்து கோவில்களிலும் கருப்பு நிறத்திலான ஆடையை அணிவித்து வழிபடுவதுதான் வழக்கம். ஆனால் இக்கோவிலில் கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள், இறைவன் காளத்தீஸ்வரர், இறைவி ஞானாம்பிகை ஆகியோரை வழிபட்டு, இங்குள்ள சனீஸ்வரருக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. கல்விக்கு உரியவரான புதனுக்கு உடுத்தும் பச்சை நிற ஆடையைப் போன்று, சனீஸ்வரருக்குப் பச்சை நிற ஆடையினை அணிவித்து வேண்டுவதன் மூலம், மாணவப் பருவத்தில் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு கல்வியில் சிறப்புகளைப் பெற முடியும் என்பது இத்தலத்து பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
கொடுமுடி மகுடேசுவரர் கோவில்
கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்
கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.
திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.
இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.
நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்
இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படும் தலம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இறைவன் திருநாமம் காசிவிசுவநாதர். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்தத் தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை, காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். அதனால், இத்தலம் இந்தியாவின் இரண்டாவது காசி என்று போற்றப்படுகின்றது.
இத்தலத்து மூலவர் காசி விசுவநாதருக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலை சாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.
தலையை சாய்த்து அருள் பாலிக்கும் குபேர சனீஸ்வரர்
இத்தலத்தில் சனீஸ்வர பகவான் குபேர சனீஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும், தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.
பிரார்த்தனை
தொழில் விருத்தி, திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி மக்கள் இங்கே பிரார்த்தனை செய்கிறார்கள்.