அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்
அனுமனின் தாகத்தை தீர்த்த முருகப்பெருமான்
கோவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் இருக்கிறது, அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில். மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 586 படிக்கட்டுகள் உள்ளன.
அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிட்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்கு தாகம் ஏற்பட்டதால், அப்போது அவர் இம்மலையில் உள்ள முருகனை வேண்டியதால், அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்தார். இங்கு அனுமார் தீர்த்தம் உள்ளதால் இந்த பகுதி அனுமார்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அனுமனுக்கு குமரன் அருள்பாலித்ததால் 'அனுமக்குமரன் மலை' என்ற பெயரும் உண்டு.
கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று வேண்டினால் உடனடியாக திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், இங்குள்ள அனுமன் குளத்தில் அதிகாலையில் குளித்தால் சகல நோயும் உடனடியாக குணமாகும் என்பது ஐதீகம்.
பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்
மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.
இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில்
தலைக்கு மேல் சிவலிங்கத்துடன் இருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி
கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில், கோவில் பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது காலகாலேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காலகாலேஸ்வரர். இறைவியின் திருநாமம் கருணாகரவல்லி. திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது, சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இக்கோவிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார்.
இக்கோவில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது.சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும், இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இக்கோவிலில், மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற மரகத நந்தி உள்ளது. மூலவர் காலகாலேஸ்வரர், மணல், நுரையால் ஆனவர் என்பதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.
ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக, ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார், தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் சிவலிங்கம் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த கோவில் குரு பரிகார தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது.
பிரார்த்தனை
சுவாமி, அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது. ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இக்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
மார்கழி திருவாதிரையன்று சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்கு திரும்பும் அம்பிகை
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி.
பொதுவாக சிவலிங்க சொருபத்தில், பீட சக்தியாக மனோன்மனி அம்பாள் பாவிக்கப்படுகிறது. இந்த அம்பிகையை நாம் தரிசிக்க முடியாது. ஆனால் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த அம்பிகைக்கு தனி சன்னதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
எல்லா சிவாலயங்களிலும், நடராஜர் தாண்டவமாடும் நிலையில்தான் நமக்கு காட்சி தருவார். ஆனால், தாண்டவமாடி முடியப்போகும் நிலையில், இக்கோவிலில் நடராஜர் தரிசனம் தருகிறார். மேலும், இந்த கோவிலில் இருக்கும் நடராஜரின் முகத்தில் ஒருவித குறும்பு பார்வை தெரிகிறது. கலைநயமிக்க வகையில் நடராஜர் சிலை அமைந்துள்ளது.
பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் அதிகாலையில் திறக்கப்படும். ஒரு சில, பெருமாள் எழுந்தருளி உள்ள சிவாலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பது உண்டு. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கின்றது. பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரையன்று போன்ற விசேட தினங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் வீதியுலா செல்வர். அவர்கள் கோவிலுக்குத் திரும்பும் போது, சிவகாமி அம்பாள் மட்டும் இந்த சொர்க்கவாசல் வழியாக கோவிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்குரிய வாசலில் தங்கையான அம்பிகை உரிமையுடன் நுழைவதாகச் சொல்கிறார்கள்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
அசுவினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஞானபைரவர்
கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக நடராஜர் தமது தில்லை திருநடனத்தை காட்டியருளிய தலம் பேரூர்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் ‘ஞான பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. இது முக்தி தலம் என்பதால் பைரவர் வாகனம் இன்றி இருக்கிறார். ஞான பைரவர் வலது கையில் சிவனைப் போல் உடுக்கையையும், இடது கையில் பாசத்தையும் கொண்டுள்ளார். ஞான பைரவர் நின்ற கோலத்தில் உள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்கும். மேலும் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட உகந்த நாளாகும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டு வந்தால் நற்பலன்கள் வந்தடையும்.
மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
அறுபடை வீடுகளுக்கும் முந்தைய முருகன் தலம்
கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் செஞ்சேரிமலை.
முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சேரிமலை.
சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம். அறுபடை வீடுகளுக்கும் முந்தையது.
சேவற்கொடியோன் கையில் சேவல் ஏந்தியிருக்கும் சிறப்பு
கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும். பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
தல வரலாறு
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அதனால் அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் வேண்டினார்.
சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து,'குமரா! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவபெருமானின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
பிரார்த்தனை
இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து முருகப்பெருமான் சன்னதியில் தீபம் ஏற்றி வேண்டினால் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு முதலிய நற்பலன்களை அடையலாம். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.