பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில்
நவபாஷாணத்தால் ஆன அபூர்வ பைரவர்
சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் என்ற ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சமீபவல்லி.
இக்கோவிலில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், காசிபைரவர் இருக்கிறார். இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். இந்த காசி பைரவரின் சிறப்பு என்னவென்றால் இவர், பழனிமலை தண்டாயுதபாணியை போல், நவபாஷாணத்தால் ஆனவர். இச்சிலையை போகர், பழனிமலை தண்டாயுதபாணிக்கு முன், பிரதிஷ்டை செய்தார். இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர்.
நீல நிறமாக மாறும் நைவேத்திய பொருட்கள்
இந்த காசி பைரவர் எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி, கபால மாலை அணிந்திருக்கிறார் அருகில் மூன்று பேர் வணங்கியபடி இருக்கின்றனர். உடன் நாய் வாகனத்தை பிடித்தபடி பாலதேவர் இருக்கிறார். இவரது சன்னதி முன்மண்டபத்தில் மற்றொரு பைரவரும் காட்சி தருகிறார். காசி பைரவரின் சிலை அதிக சக்தியுடைய நவபாஷாணத்தால் ஆனது என்பதால், பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும், சார்த்தும் வடைமாலையிலும் கூட விஷமேருகிறது. இதனால் நீரும், வடைமாலையும் சில மணி நேரங்களில் நீல நிறமாக மாறி விடுவது அதிசயம். ஆகையால் தீர்த்தமோ,வடைமாலையோ இங்கு பிரசாதமாக தருவது கிடையாது. இதன் மருத்துவ சக்தியை தாங்கும் வலிமை மனிதர்களுக்கு இருக்காது என்பதன் அடிப்படையில், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் சன்னிதியின் கூரை மீது போடப்படும். வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்
இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு . பக்தர்கள் பைரவரின்பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இத்தலத்தில் சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்
காசிக்கு இணையான காலபைரவர் தலம்
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். சப்தரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டதால், இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப் பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.
புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டு விதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி, காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. 'காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை' என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.
காசியைப் போலவே கோவில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.
பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.
இங்கு பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பதும், தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம். மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்கு தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும்.
சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவில்
காசிக்கு மேலாக போற்றப்படும் சேத்திரபாலபுரம் காலபைரவர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு மேலாக போற்றப்படும் பழமையான காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னிதியில் மட்டுமே காட்சி தருவார். காசியில் கூட பைரவருக்குத் தனி ஆலயம் கிடையாது. ஆனால் சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் மூலவராக எழுந்தருளி உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அது மட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை. ஆனால் சேத்திரபாலபுரத்தில் உள்ள பைரவர் தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல், தாமரை மலரில் சிரித்த முகத்தோடு வீற்றிருக்கிறார். இதனால் இவரை 'ஆனந்த கால பைரவர்' என்று அழைக்கிறார்கள். இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.
காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை, இந்த தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்த கதை உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி (கும்பகோணம்) அமைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தைச் சுற்றி சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம், கணேச தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை 'சங்கு முக தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருப்பதுதான். அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது.
பிரார்த்தனை
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும். அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண் டாகும். சுபகாரியத் தடைகள் விலகும். பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளுக்கு பாகற்காயை வெட்டி அதில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வாஸ்து தோஷம், கோ சாபம், பிதுர் சாபம், மாது சாபம், பண நஷ்டம், பெற்றோர் சாபம் போன்றவை நீங்க பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட வேண்டும், உடல் நலக்குறைவு நீங்கி, அந்நிய தேசப்பயணம் சென்று பொருள் ஈட்ட கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும். அரசியலில் பெயர் புகழ் சேர பைரவருக்கு கிராம்பு மாலை அணிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளா்ச்சிக்கு பைரவருக்கு ஏலக்காய் மாலை அணிக்க வேண்டும். சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள் புத்திக்கூர்மை பெற்று தெளிந்த மனநிலை பெற செவ்வாழை பழத்தில் நெய் தீபமிட்டு வழிபட வேண்டும். இந்த கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.