கோலார் கோலாரம்மன் கோவில்
சிற்ப கருவூலமாக விளங்கும் கோலாரம்மன் கோவில்
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கோலாரில் அமைந்துள்ளது, கோலாரம்மன் கோவில். கோலார் மக்கள் பார்வதி தேவியை, கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர். பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர். இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்து பாதிப்பு ஏற்படும்போது, இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
ராஜராஜ சோழன் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டிய கோவில்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கோலார் பகுதியை கைப்பற்றி தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள், குவளாலநாடு (கோலார்), நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கோலார் நகரை, சோழர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் நீண்ட நாட்கள் வைத்திருந்தமைக்கு பிரதான காரணமே அது தங்க பூமி என்பதாலேயே என்கின்றனர் சில வரலாற்று அறிஞர்கள். கோலார் நகருக்கு பெருமை சேர்பதாக இருப்பது முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரன் ஆகியோர் கட்டிய உலகப் புகழ்பெற்ற, இந்த கோலார் அம்மன் கோவிலாகும்.
இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டுமே சப்த மாதர்களுக்காக முதலாம் இராஜராஜன் மற்றும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்டவை. குறிப்பாக போரில் வெற்றியை பெற்றுத்தரும் கடவுள்களான சப்த மாதர்களுக்காக (சாமுண்டி) இக்கோவில் கட்டப்பட்டதாகும்.
மிரள வைக்கும் போர்க்களக் காட்சியின் சிற்பத் தொகுப்பு
கோலார் அம்மன் கோவில் ஒரு சிறந்த சிற்ப கருவூலமாக விளங்குகிறது. குறிப்பாக இக்கோவிலின் முதல் பிரகாரத்தின் நுழைவாயிலின் வடக்கு பகுதி மண்டபத்தில் சுமார் ஐந்து அடி, உயரமும் நான்கு அடி அகலமும் கொண்ட கற்பலகையில் இரு நாட்டு வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நேரடிக் காட்சி அப்படியே சிற்பமாக்கப் பட்டுள்ளது. சிற்ப தொகுப்பின் மேற்புறம் அரசன் போர்க்களம் புறப்படும் காட்சியும். பிறகு போர்களத்தில் தங்கியிருக்கும் காட்சியில் ஆடல் மகளிர் நடனம்புரியும் காட்சியும் உள்ளன. மறுநாள் போர் ஆரம்பம். இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேராக மோதிக்கொள்ளும் போர்களக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் யானை ஒன்று போர்க்களத்தில் எதிரி படையினரை நோக்கி வேகமாக தாக்குதல் நடத்த ஓடிவரும் காட்சி பார்ப்பவரை மிரளவைக்கிறது. அதைத் தொடர்ந்து குதிரை வீரனின் வாள் வீச்சில் எதிரி வீரன் ஒருவனின் தலை துண்டிக்கப்பட்டு தலை வேறு உடல் வேறாக கிடக்கும் காட்சியில் போரின் உக்கிரத்தை காண முடிகிறது.
மேலும் குதிரையின் காலடியில் வீரன் ஒருவனின் உடல் இரண்டாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி பார்ப்பவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சிற்பத் தொகுப்பின் கீழ் பகுதியில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கழுகு கொத்தி தின்னுவது போன்றும், நரியொன்று இறந்த வீரனொருவனின் உடலில் இருந்து சதைகளை பிய்த்து தின்னுவது போன்ற சிற்பங்களில் போரின் கொடூரத்தை உணரமுடிகிறது.
மொத்தத்தில் இந்த சிற்பத்தை பார்ப்பவர்களுக்கு அந்தகால போர்களத்திற்கு நம்மை கூட்டி செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ஒரு போர்க் களத்தின் நேரடி காட்சியைத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ள முதல் சிற்பத் தொகுப்பு அனேகமாக இதுவாகத்தான் இருக்கமுடியும்.
காட்டி சுப்ரமண்யா கோவில்
ஏழு தலை நாக வடிவில் முருகனும், நரசிம்மரும் ஒருசேரத் தோன்றும் அபூர்வக் காட்சி
கர்நாடக மாநிலம் பெங்களூருலிருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது காட்டி சுப்பிரமணியா கோயில். இக்கோவில் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் கருவறையில் சர்ப்ப வடிவில் முருகப்பெருமானும், லட்சுமி நரசிம்மரும் ஒன்றாக காணப்படுவது தனிச்சிறப்பாகும்.
கருவறையில் ஏழு தலை நாகம் கொண்ட முருகரின் சிலையானது ஒரே கல்லில் செய்யப்பட்டது. சிலையின் பின்புறத்தில் நரசிம்மரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் முருகன் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரு தெய்வங்களும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில், கருவறையில் பின்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
கதிகேசுரன் என்ற அரக்கனை வீழ்த்துவதற்காக முருகப்பெருமான் ஏழு முகமுள்ள பாம்பின் வடிவமாக இத்தலத்தில் அமர்ந்து தவம் செய்ததாக ஐதீகம். அதே கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பாம்பு வடிவத்தில் இருந்ததால், தனக்கு கருடனால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முருகப்பெருமான், தன்னைக் காக்கும்படி திருமாலை வேண்டுகிறார். திருமாலும் லட்சுமியுடன் கூடிய நரசிம்ம மூர்த்தியாக வடிவம் கொண்டு சுப்பிரமணியரைக் காக்கிறார். மேலும், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனிடம் இருந்து, பாம்புகள் (நாகர்கள்) குடும்பத்தைக் காப்பாற்றும்படியும் முருகப் பெருமான், நரசிம்ம மூர்த்தியிடம் வேண்டினார். எனவே இத்தலம் நாகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற கோவிலாக விளங்குகிறது.
பிரார்த்தனை
இத்தலம் செவ்வாய் தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு - கேது தோஷம் உள்ளவர்களுக்கு நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. பெரும்பாலான நாட்களில் சர்ப்ப தோஷ பூஜை அல்லது சர்ப்ப சம்ஸ்காரம் செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, சஷ்டி, ஆயில்யம் நட்சத்திர தினங்கள் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுவதால், அன்றைய தினம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆவணி நாக பஞ்சமி, குமார சஷ்டி தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இத்தலத்தில் குழந்தையில்லாத தம்பதியினரின் வேண்டுதலுக்கு இணங்க குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு பக்தர்களால் நாகர் சிலைகளை நிறுவுவும் பழக்கம் உள்ளளது. இதனால் கோவிலுக்கு அருகில் ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம்.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
பட்டத்து யானைக்கு மீண்டும் கண்பார்வை அளித்த நஞ்சுண்டேஸ்வரர்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 23 கி.மீ., தொலைவில், அமைந்துள்ள தலம் நஞ்சன்கூடு. இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.
ஒரு சமயம், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானிற்கு மிகவும் பிரியமான பட்டத்து யானைக்கு திடீரென கண் பார்வை பறி போனது. அமைச்சர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடக்கும் பூஜைகளில், நாற்பத்தி எட்டு நாட்கள் கலந்து கொள்ள தனது பட்டத்து யானையை அனுப்பி வைத்தார் திப்பு சுல்தான். நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடைந்த போது, யானைக்கு மீண்டும் கண் பார்வை திரும்பியது. இதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான், மரகத லிங்கம் ஒன்றை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். மரகத ஆரம் ஒன்றையும் காணிக்கையாகக் கொடுத்தார். இந்த சிவலிங்கம், ஹக்கீம் நஞ்சுண்டா என்று பெயரால் அழைக்கப்படுகிறது.
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்
எதிரி பயம் போக்கும் நிமிஷாம்பாள்
கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். நிமிஷாம்பாள் 'என்பதற்கு கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது பொருள். 'கிருஷ்ண சிலா' என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது.
பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்
முன்னொரு காலத்தில், முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி 'நிமிஷாம்பாள்' என பெயரிட்டான்.
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். திருமணத் தடைகளால் பாதிப்புற்ற பிள்ளையையோ, பெண்ணையோ இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, வேண்டிச் சென்றால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் கபினி ஆற்றின் கரையில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் அமைந்துள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோவில் . இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.
அனைத்து சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து 'சுகண்டித சர்க்கரை' என்ற பெயரில் பிரசாதமாக, சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்து, பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை 'ராஜ வைத்தியர்' என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.
இத்தலம் மைசூர் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.