திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துச் சிவிகை, முத்துக் குடை அளித்த தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி.
திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி, சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார், சம்பந்தரைத் தூக்கிக்கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது.
திருதூங்காணைமாடம் சிவத்தலத்தை தரிசித்து திருவட்டத்துறை நோக்கிச் செல்லும்போது, தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருவட்டத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார்.
அன்றிரவு, திருவட்டத்துறையிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும், அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதேபோன்று, சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விவரங்களைக் கூறி, முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டார்.
மறுநாள் காலை, திருவட்டத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு, இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக்கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக் குடை நிழலில் திருவட்டத்துறை ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது தேவாரப் பதிகம் பாடி வணங்கினார்.
திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில்
சனி, செவ்வாய் தோஷங்களுக்கான பரிகார தலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து, 25 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
ஒருமுறை, சனி பகவானும் செவ்வாய் பகவானும், சூரிய சந்திரர்களால் சபிக்கப்பெற்று, அதன் காரணமாக எலும்புருக்கி நோய்க்கு செவ்வாய் பகவானும், பெருநோய்க்கு சனி பகவானும் ஆளாகினர். செவ்வாய், சனி இருவரும் பிரம்மாவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கூறும்படி கேட்டனர். பிரம்மாவின் அறிவுரைப்படி, இருவரும் பூலோகம் வந்து பல சிவத்தலங்களில் சிவபெருமானை வழிபட்டனர். இறுதியாக இத்தலம் வந்து கடும் தவம் புரிந்து இறைவனை வழிபட்டு தங்கள் தோஷமும், சாபமும் நீங்கப் பெற்றனர்.
சனி பகவானும் செவ்வாய் பகவானும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.
சிலம்பிமங்கலம் சிலம்பியம்மன் கோவில்
தில்லை காளியின் மறுவடிவமான சிலம்பியம்மன்
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில், 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.
கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள். ஒரு முறை சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும். தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், தில்லைக்காளி அம்மன் ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து, அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன. அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே அந்தப் பகுதி மக்கள் கோவில் எழுப்பினர்.
கோவிலில் நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும். இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன். தில்லை காளியின் மறுவடிவம் என்று இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும். தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை.
அம்மனுக்கு முந்திரி மாலையை நேர்த்திக் கடனாக செலுத்தும் விவசாயிகள்
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, விவசாயிகள் அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். இன்றளவும் அமோகமான விளைச்சலை பெறும் விவசாயிகள், அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
வேணுகோபாலசுவாமி கோவில்
பத்மாசன கோலத்தில் வணங்கி நிற்கும் அபூர்வ கருடாழ்வார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வ கோலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
https://www.alayathuligal.com/blog/e34gxzgbya2nzmgj7lssfl84dykkse