சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம்
மாசி மாத கடைசி ஞாயிறு முதல் 28 நாட்கள், பக்தர்களின் நலனுக்காக மாரியம்மன் கடைபிடிக்கும் விரதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும்.
கருவறையில் மாரியம்மன், தனது திருமுடியில் தங்கக் கிரீடம் அணிந்து, குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச, இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு மிகப்பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். தனது எட்டு கைகளில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவைகளைத் தாங்கி உள்ளாள். அன்னையின் வலது காலின் கீழ் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. உட்கார்ந்த கோலத்தில், இந்த அம்மனைப் போல பெரிய திருமேனி உடைய அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த அம்மனின் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டதால் அம்மனுக்கு 'மூலிகை அம்மன்' என்ற பெயரும் உண்டு. சுதை வடிவமானவள் என்பதால் இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.
சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை பிரார்த்திக்கிறார்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மனே, உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில், அம்மனை மனதில் கொண்டு, ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல், இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது.
அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை அபிஷேகம் செய்வார்கள். இதனை பூச்சொரிதல் என்பார்கள்.
பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு, அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே மாரியம்மனுக்கு கொடுக்கப்படுகிறது.