கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில்

மீனபரணி தூக்க திருவிழா - குழந்தை பாக்கியம் கிடைத்ததற்காக, செய்யப்படும் வித்தியாசமான நேர்த்திக்கடன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது கொல்லங்கோடு. இந்த கிராமத்தில் உள்ள, 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கருவறையில் இரண்டு வடிவங்களில் அம்மன், சாந்தமாகவும், ஆக்ரோஷமாகவம் அருகருகே அமர்ந்து அருள் புரிகிறார். கொல்லங்கோடு பத்திரகாளி அம்மனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று பழைய முடிப்புரை என்றும், மற்றொன்று புதிய முடிப்புரை என்றும் அழைக்கப்படுகிறது.

வருடம் தோறும் பங்குனி மாதம் நடைபெறும், தூக்க திருவிழாமிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. திருவிழாவின் கடைசி நாளான பரணி நட்சத்திரத்தன்று, குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சி நடைபெறும். பங்குனி மாதத்தை மலையாளத்தில் மீன மாதம் என அழைப்பதால் 'மீன பரணித் தூக்கம்' திருவிழா என இவ்விழா பிரபலம் ஆகி உள்ளது. மீன பரணித் தூக்கம் திருவிழா புதிய முடிப்புரை கோவிலில் நடைபெறுகின்றது.

குழந்தை வரம் வேண்டி தம்பதியினர், இந்தக் கோவிலில் தூக்க நேர்ச்சை நடத்திக்கொடுப்பதாக, அம்மனிடம் வேண்டுதல் செய்கிறார்கள். அம்மன் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகின்றனர். அதுபோல, குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் பெற்றோர் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர்.

நான்கு மரச்சக்கரங்களுடன் கூடிய ரதம் போன்ற ஒரு அமைப்பே தூக்க வண்டியாகும். ஐம்பதடிக்கும் மேல் உயரமான தூக்க வில்லு என்று அழைக்கப்படும் இந்தத் தேரில், கோவிலை சுற்றி ஒரு முறை தங்கள் குழந்தையை வலம் வர வைப்பது, குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகளின் நேர்த்திக்கடன் ஆகும். தேரின் உச்சியில் நீளமான இரண்டு வில்கள் (கம்பு) பொருத்தப்பட்டுள்ளன. வில்களின் நுனியில் குறுக்கு வாட்டில் தலா இரண்டு மர்ச் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு தூக்கக்காரர்களை மார்பிலும் இடுப்பிலும் வஸ்திரத்தால் பிணைத்து அந்த மரச்சட்டங்களில் தொங்க விடுகிறார்கள். அவர்களின் கழுத்தில் மாலை, புஜத்தில் பூ சுற்றப்பட்டுள்ளது. வில்லில் பூட்டும் முன்பு அவர்களின் விலாப்புறத்தில் வெள்ளி ஊசியால் குத்தி துளி உதிரம் எடுத்து, அதை ஊசியுடன் ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தில் போடுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான தூக்கக்காரர்களின் இரத்தத்தை விழா முடிந்ததும் தூக்கும் வண்டியின் அருகில் கொட்டுகிறார்கள். இது 'குருதி தர்ப்பணம்' எனப்படுகிறது. 'அம்மனோடு தூக்கக்காரர்கள் இணைவதன் அடையாளம் இது' என்கினறனர்.

மரச்சட்டங்களில் அவர்கள் கட்டப்பட்டதும் அவர்கள் கைகளில் ஒரு குழந்தை கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு வில்களில் பின் பகுதியை கயிற்றால் பிணைந்து சிலர் கீழே இழுக்கிறார்கள். இதனால் முன்பகுதி சரேலென மேலே போகிறது. இப்போது நான்கு தூக்கக்காரர்கள், குழந்தைகளோடு நாற்பதடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்! சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், குலவையிடுகின்றவர்களும், 'ஆத்தா! காளியம்மா' என்று கோஷம் போடுகிறவர்களுமாக ஒரே ஆரவாரமாயிருக்கும். செண்டை மேளம் சப்தத்தில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் வடம் பிடித்து இழுக்க தூக்கத் தேர் கோவிலை வலம் வருகிறது. ஒரு சுற்று முடிந்ததும் தூக்கக் காரர்களிடமிருந்து குழந்தையை உரியவர் பெற்றுக் கொள்ள, அடுத்த நான்கு நபர்கள் தூக்க வண்டியில் பிணைக்கப்படுகின்றனர். ஒரு முறை நான்கு தூக்கக்காரர்களும், நான்கு குழந்தைகள் ஆகியோர் தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ள முடியும்.

அந்தரத்தில் குழந்தைகளைத் தூக்கிச் சென்றபடி வழிபடுவதால் இதற்குத் தூக்கத் திருவிழா என்று பெயர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும், தூக்கக்காரர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். தூக்க வில்லில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் தூக்கக்காரர்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள்.

சந்தான பாக்கியம் வேண்டி ஏராளமானோர் தூக்க நேர்ச்சைக்கு நேர்ந்து கொள்கிறார்கள். தூக்க நேர்ச்சியின் ஐதீகம் எஎன்னவென்றால் தாரியாசுரனை சம்ஹாரம் செய்த பிறகும் பத்ரகாளியின் சினம் அடங்கவில்லையாம். அம்மனை சாந்தி பெறச் செய்ய, ரத்தக் குறி காண்பித்து கருடனைப் போல் சக்தியைச் சுற்றிப் பறந்து சென்று ஆராதிப்பதாக ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மீன பரணி தூக்கத் திருவிழா, 10.04.2024 புதன்கிழமை அன்று நடைபெறுகின்றது.

 
Previous
Previous

காவலூர் சண்முகசுப்பிரமணியசுவாமி கோவில்

Next
Next

அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்