வேலாயுதசுவாமி கோவில்
மூலவர் முருகப்பெருமான் வேலுடன் காட்சி தரும் அரிய கோலம்
கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலில், மூலவர்முருகப்பெருமான் கையில் வேலுடன் காட்சி தருகிறார். மூலவரின் இத்தகைய தோற்றம் வேறு எந்த தலத்திலும் காண்பதற்கு அரிது. இத்தலம் கோவையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். சிறந்த முருக பக்தரான இவர், அடிக்கடி பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன் என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், பழனி முருகனை தரிசிக்காமல், புரவி பாளையத்திற்கே திரும்பிவிட்டார். பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே என்ற கவலையினாலேயே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவு, ஜமீன்தாரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட கிணத்துகடவு பொன்மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் 'வேலாயுதசுவாமி' என அழைக்கப்பட்டார்.
பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முருகப்பெருமான், இந்த கிணத்துக்கடவு பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.
அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கனககிரி’ என்று பாடி இருக்கிறார். 'கனக' என்பது பொன்னையும் 'கிரி' என்பது மலையையும் குறிக்கும்.
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் வேலாயுதசுவாமியை வேண்டிக் கொள்கிறார்கள்.