குத்தாலம் சோழீஸ்வரர் கோவில்

கையில் அமிர்த கலசத்துடன் காட்சி தரும் பாதாள சனீஸ்வரர்

கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமத்தில் சோழீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தேவார வைப்புத்தலம் இது. இறைவன் திருநாமம் சோழீஸ்வரர் . இத்தலத்தில் பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி என்ற திருநாமத்துடன் இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமிக்கு திராட்சை சாறு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபட விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. நிச்சயதார்த்தம் செய்த பிறகு, பிரச்னையின்றி திருமணம் நடக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். தீ தொடர்பான பணியில் இருப்பவர்கள் ஆபத்து வராமல் இருக்கவும், உஷ்ணத்தால் நோய் ஏற்பட்டவர்கள் நிவர்த்திக்காகவும் இங்கு வழிபடுகிறார்கள்.

அமிர்த கலச சனீஸ்வரர்

மகரிஷிகள், தேவர்கள் சிவனை வழிபட்ட தலம் இது. இவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, சனீஸ்வரர் அவர்களை கையில் அமிர்த கலசம் ஏந்தி வரவேற்றாராம். இந்த அமைப்பிலேயே காட்சி தருவதால் இவர் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும், பாதாளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியதால், பாதாள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள். அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி சீர்செய்தார்கள்.

இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில் கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது. இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர். சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும். ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர். ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள். கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பரிகார தலமென்பதால், இங்கு நவக்கிரக சன்னதி இல்லை.

சனிதோஷ பரிகாரத் தலம்

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்ட நளமகாராஜன், நிவர்த்திக்காக சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று, சுவாமியை வழிபட்டான். அவன் இத்தலம் வந்தபோது, இங்கிருந்த பாதாள சனீஸ்வரரையும் வணங்கி, தனக்கு அருளும்படி வேண்டினான். சனீஸ்வரர் அவனிடம் திருநள்ளாறு தலத்தில் தோஷ நிவர்த்தியாகும் என்று கூறியருளினார். மகிழ்ந்த நளன், திருநள்ளாறு சென்று தோஷ நிவர்த்தி பெற்றான். சனி தோஷ பரிகார தலமான இங்கு சனிப்பெயர்ச்சியன்று பரிகார மகா யாகம் நடக்கும். சனிப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இவரை வழிபட்டு வரலாம்.

 
Previous
Previous

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோவில்

Next
Next

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்