திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்கும் பத்மாவதி தாயார்

கீழ்த் திருப்பதிக்கு அருகே 5 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சானூர் பத்மாவதி கோவில். பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது. வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். ஆகாசராஜன் எனும் சோழ மன்னனுக்கும், தரணி தேவிக்கும் மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் போது அவருக்கு மனைவியும் ஆனவர். இவருக்கு அலர்மேல் மங்கை தாயார் என்ற பெயரும் உண்டு.

அலர் என்றால், தாமரை. மேலு என்றால், வீற்றிருப்பவள். இதையே, பத்மாவதி என்கின்றனர். பத்மம் என்றாலும், தாமரை என்று பொருள். வதி என்றால், வசிப்பவள். ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள். பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், 'உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு' என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில், கறிவேப்பிலையால் ஏற்பட்ட ஊடல்

மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால், ஸ்ரீநிவாசன் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் . பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் ஸ்ரீநிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அஹோபிலம் நரசிம்மருக்கு, இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.

பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவம் சிறப்பாக நடந்தேறியது என்று சீனிவாசனின் தாயார் வகுளாதேவி கர்வம் அடைந்தார். அவரது கர்வத்தை அடக்க நினைத்த நாரதர், பத்மாவதி தாயாரிடம் சென்று திருமணத்தில் கருவேப்பிலையும், கனகாம்பரம் மலரும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால் திருமணத்திற்கு பின்னர் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஊடல் ஏற்பட்டது. இந்த ஊடல் பெரிதாகி, பத்மாவதி தாயார் பெருமாளை விட்டுப் பிரிந்து சென்று திருச்சானூரில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளினாள். இதனால்தான் திருமலை கோவிலில் இன்றும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.

திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது. 'வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ' எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முறை

திருமலை வேங்கடவனை தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

 
Previous
Previous

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

Next
Next

ஆனேகுட்டே விநாயகர் கோவில்