கோடங்கிப்பட்டி சித்திரபுத்திர நாயனார் கோவில்

அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்திரகுப்தன் தலம்

தேனி - போடிநாயக்கனூர் சாலையில், சுமார் 9 கி.மீ. தூரத்திலுள்ள கோடங்கிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது, 500 ஆண்டுகள் பழமையான சித்திரபுத்திர நாயனார் கோவில். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தையும், கோடங்கிபட்டியையும் தவிர வேறு எந்த தலத்திலும் சித்திரகுப்தனுக்கு என்று தனி கோவில் கிடையாது.

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன். ஜீவனின் மரண காலத்தில் சித்திரகுப்தன் கொடுக்கும் பாவ, புண்ணியக் கணக்கின் முடிவை வைத்தே எமதர்மன் ஜீவனுக்கு தண்டனை அளிப்பதும், பிரம்மா அதன் தலையில் எழுதுவதும் அமையும். ஆகவே சித்திரகுப்தரை வேண்டிக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.

சித்திரகுப்தன் காமதேனுவின் மகனாக சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில், பௌர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், சக்திதேவி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் சித்திரபுத்திரன் என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தி பெற்றுள்ளது.

சித்திரகுப்தர் பிறந்த நாளான சித்ரா பௌர்ணமியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் அவர் நமது பாவங்களை நீக்குவார் என்பது நம்பிக்கை. கோடாங்கிபட்டி சித்திரபுத்திரநாயனார் கோவிலில் இவரது மனைவியான பிரபாவதிக்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்தில் இருந்து இவர் பிறந்ததால் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சித்திராபவுர்ணமியன்று சித்திரகுப்த மந்திரம் சொல்லி வழிபட அவர் நமது இல்லத்தில் குடியேறி செழிப்பான வாழ்க்கை அமைய வழிவகுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நவகிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதியாக உள்ளார். எனவே, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இவரை வழிபட்டால், தோஷம் நீங்கும். அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட நற்பலன்கள் அடைவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரதமிருந்து, உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொள்வதால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள்.

காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

https://www.alayathuligal.com/blog/azn2njxmhpk82622klyadna7pyc9tk

 
Previous
Previous

திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனாய பிராணநாதேசுவரர் கோவில்

Next
Next

கள்ளழகர் கோவில்