மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில்
சாளக்கிராமத்திலான அபூர்வ நவநீத கிருஷ்ணன்
குழந்தை பாக்கியம் அருளும் ரோகிணி நட்சத்திர வழிபாடு
திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவில், அம்பாசமுத்திரம் தாலுகாவில் அமைந்துள்ளது மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். கருவறையில் மூலவர் நவநீத கிருஷ்ணன், சாளக்கிராமத்திலான திருமேனி உடையவர். அவர் குழந்தை வடிவில், இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டை வைத்துக்கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்தக் கோவில் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், அசதி காரணமாக வெயிலிலேயே படுத்து உறங்க தொடங்கி விட்டார்.அப்பொழுது ஒரு பாம்பு அங்கு வந்து, அவரது தலைக்கு மேலே தனது படத்தை எடுத்து அவருக்கு நிழல் அளித்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுவன், அவரைப் பார்த்து பிற்காலத்தில் நீங்கள் அரச பதவியை அடைவீர்கள் என்றும், அப்படிப்பட்ட நிலையை அடைந்தால், அவர் எதிர்காலத்தை கணித்த தனக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்னர் படிப்பறிவில்லாத மாடு மேய்ப்பவருக்கு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வேலை கிடைத்து, மிகக் கடின உழைப்பால் விரைவில் அமைச்சராக உயர்ந்தார். தன் எதிர்காலத்தை கணித்த சிறுவனைத் தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் இங்கு வந்து, மேலசெவல் என்ற இடத்தில் நவநீத கிருஷ்ணர் கோவிலைக் கட்டினார்.
இந்த நவநீத கிருஷ்ணரை ரோகிணி நட்சத்திர நாளில், பால் பாயசம் படைத்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு, சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில்,மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்து உற்சவரை டோலோத்சவம் நடத்தி நாமசங்கீர்த்தனம் செய்து குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தம்பதிகளின் நட்சத்திரம் கோத்ரம் பெயரில் விசேஷ அர்ச்சனைகள் செய்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டு, ஏராளமான வெளியூர் தம்பதிகள் சந்தான பாக்கியம் அடைந்து இருக்கிறார்கள்.
திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.