நெல்லையப்பர் கோவில்
திருநெல்வேலி காந்திமதி அம்மன்
நெல்லையப்பர் கோவிலில் அருள் பாலிக்கும் காந்திமதி அம்மன், வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. காந்தசக்தி மிகுந்து, பிரகாசமாக அம்பிகை விளங்குவதாலும் இது காந்தி பீடமாயிற்று. இத்தலத்தில் அம்பிகைக்கும், ஈசனுக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
அன்னம் பரிமாறும் அம்பிகை
இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்துப் போற்றும் விதிமுறையை இத்தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலைநாட்டப்படுகிறது. மற்ற தலங்களில் சுத்த அன்னம் நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கு சுத்த அன்னத்துடன் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு குழம்பு என அறுசுவையுடன் கூடிய உணவையே பிரசாதமாக நைவேத்தியம் செய்வது தனிச்சிறப்பு. கணவன் மனைவி எப்படி ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தச் சடங்கு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கிப் புறப்படுவாள்.இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். பின் ஆலயத்திலுள்ள அனைத்துப் பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இக்கோயிலில் அன்னை காந்திமதி தினந்தோறும் நிகழ்த்திக் காட்டுகிறாள்
அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணியும் அம்மன்
உலகம் அனைத்தும் இறுதிக் காலத்தில் அம்பிகையிடம் ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக காந்திமதி அம்மனுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை வரை அம்பிகை வெண்ணிற ஆடையிலேயே அருள்பாலிக்கிறார்.
காந்திமதி சீர்
இத்தலத்தில் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாணத்தின் 3ம் நாள் முதல் 7ம் நாள்வரை காந்திமதி அம்மன் கம்பை நதிக்கு நீராடச் செல்லுவது வழக்கம். அப்போது அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பிகையின் தோழியராக பாவித்து அவர்கள் நீராட, ஆலயத்தின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன. இரண்டையும் சிரசில் வைத்து நீராட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும்,பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது ஐப்பசி திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். 14ஆம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் சிவன் சன்னதிக்கு மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை காந்திமதி சீர் என்று அழைப்பார்கள். இந்த சீர் வரிசை பலகாரங்களை காணவே கண் கோடி வேண்டும்.
ஆடிப் பூரம் வளைகாப்பு
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். இந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
அம்பிகைக்கு பிரதோஷம்
பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.
இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது.
தம்பதியர் அன்யோன்யத்திற்கு அருளும் அம்பிகை
சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஐந்தாம் நாளன்று வெளியான பதிவு
திருவாரூர் கமலாம்பிகை
https://www.alayathuligal.com/blog/zk6z5ghrez6ekcnc9gg5r373rxmf5a