மீனாட்சி அம்மன் கோயில்

ஆங்கிலேய கலெக்டரின் உயிரைக் காப்பாற்றிய மீனாட்சி அம்மன்

1812 முதல் 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர், ரவுஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர், அவர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக்கொண்டார். தங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தும் அவரை மதுரை மக்கள்m பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.

அவர் தினமும், தன்னுடைய குதிரையில் ஏறி, மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வந்த பிறகே, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். அந்த அளவுக்கு அவர் அம்பிகையிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு மதுரையில், இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. மக்களுக்கு என்ன இடையூறு நேருமோ என்ற கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் ரவுஸ் பீட்டர். நள்ளிரவு வேளையில், மூன்று வயதே ஆன சிறுமி ஒருத்தி அவருடைய அறைக்குள் நுழைந்தாள். தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து வந்தாள்.

சிறுமியும், கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய சிறுமி யார் என்பதும், உள்பக்கமாகப் பூட்டிய அறைக்குள் அவள் எப்படி வந்தாள் என்பதும் தெரியாமல் திகைத்த கலெக்டர், அந்த சிறுமிக்கு நன்றி சொல்லத் திரும்பினார். அதற்குள் அந்தச் சிறுமி தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்பது போல் அங்கிருந்து சென்றுவிட்டாள். சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர், அந்தச் சிறுமிக்கு நன்றி சொல்ல ஓடினார். கலெக்டரால் அந்தச் சிறுமியைப் பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி, மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னைக் காப்பாற்றியது அம்பிகை மீனாட்சிதான் என்பதை புரிந்துகொண்ட கலெக்டர் ரவுஸ் பீட்டர், மீனாட்சி அம்மனுக்கு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்கப் பாதணிகளைக் (குதிரை சவாரியின் போது பயன்படுத்தப்படும் Stirrups) காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.இன்றும் இந்த தங்கப் பாதணிகளை நாம் மீனாட்சி அம்மன் கோவிலில் காணலாம்.

படம் உதவி : திரு. மணிகண்டன், மதுரை

படம் உதவி : திரு. மணிகண்டன், மதுரை

மீனாட்சி அம்மன் கோயில்.jpg
Previous
Previous

கச்சேரி விநாயகர் கோயில்

Next
Next

ரங்கநாதர் கோவில்