சிவராத்திரியின் சிறப்புகள்
சிவபெருமானுக்குப் பிரியமுள்ள சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் இரண்டு சிவராத்திரிகள் வரும். தேய்பிறையில் ஒரு சிவராத்திரியும், வளர்பிறையில் ஒரு சிவராத்திரியுமாக வருடத்திற்கு 24 சிவராத்திரிகள் வரும். ஆனால் மாசி மாதம் தேய்பிறையில் வருகின்ற சிவராத்திரி தான் சிறப்புமிக்க சிவராத்திரி என்பதால், அதையே மகாசிவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றது.
ஒரு சமயம் கைலாய மலையில் சிவபெருமானிடம் உரையாடிக் கொண்டிருந்த பார்வதிதேவி, ‘தங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?’ என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான். ‘தேவி! மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளன்று, நீ எம்மை இரவு வேளையில் நான்கு ஜாம வேளையிலும் கண் விழித்திருந்து, உபவாசத்துடன் என்னை பூஜித்து வழிபட்டாய். அந்த நாளே எனக்கு மிகவும் பிரியமான நாள்’ என்றார். இதை கேட்டு மகிழ்ந்த பார்வதிதேவி, 'அப்படி என்றால் அந்த நாளில் தங்களை வழிபடும் எல்லோருக்கும், இப்பிறவியில் செல்வமும், மறு பிறவியில் சொர்க்கமும், இறுதியில் நற்கதியும் தாங்கள் அருள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி விரதம்
மகா சிவராத்திரி அன்று வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம உச்சரித்து பூஜிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாலங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால், கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கள வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.