குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்
ராமாயண காலத்தோடு தொடர்புடைய கோவில்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். கருவறையில் முத்துமாலை அம்மன் நான்கு திருக்கரங்களோடு, கையில் கிளி ஏந்தியபடி காட்சி தருகிறாள்.
மிகவும் பழமையான இக்கோவில் ராமாயண காலத்தோடு தொடர்புடையது. ராவணன், சீதாதேவியை சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் 'குரங்கணி' எனப் பெயர் பெற்றது.
சீதாதேவி தான் சென்ற வழியை ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள், புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு முத்துமாலையம்மன் என்று பெயரிட்டனர்.
ஆங்கிலேய அதிகாரி கூப்பிட்ட குரலுக்கு பதில் அளித்த முத்துமாலை அம்மன்
ஆங்கிலேய அதிகாரி கோவிலுக்கு தந்த இரண்டு மண் குதிரைகள்
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த நவாப், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு ஆங்கிலேய அதிகாரி குதிரையில் இக்கோவிலுக்கு வந்தார். கோவில் சுற்றுச்சுவரை இடிக்க முயற்சித்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்தவகள் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி 'இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன். அது பதில் சப்தம் தருமா? என கேட்க, அதற்கு அவர்கள் 'நிச்சயம் தரும்' என்றனர்.
ஆங்கிலேய அதிகாரி,'முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்' என மூன்று முறை கூப்பிட்டார். 'என்ன?' என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, இரண்டு மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.
இக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி பெருந்திருவிழாவின் போது, வானில் கருடன் வட்டமிடும் அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.