கதலிவனேஸ்வரர் கோவில்
அதிசய வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் அருள் புரியும் இறைவன்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள திருக்களம்பூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது கதலிவனேஸ்வரர் கோவில்.
‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் இவருக்கு 'ஸ்ரீகதலிவனேஸ்வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்கு வீற்றிருக்கும் மூலவர், சுயம்புலிங்கம். அவரைச் சுற்றிலும் பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. இந்த வாழைமரங்கள் மழை நீரை மட்டுமே உறிஞ்சி வளருகின்றன. இம்மரங்களின் அடியில் பாறைகள் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து வருகின்றன. இங்கு தோன்றும் வாழைக் கன்றுகளை வெளியே வேறு எங்கு கொண்டு போய் வைத்தாலும் வளராது. அதேபோல், வெளியிடங்களிலிருந்து வாழைக் கன்றுகளைக் கொண்டுவந்து இந்த கோயிலுக்குள் வைத்தாலும் வளராது. மேலும் இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் எதையும் மனிதர்கள் சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர், அதைப் பஞ்சாமிர்தம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின்னரே சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.
வாழை மரத்திலிருந்து வெளிப்படும் சிவப்பு நிறத் திரவம்
இங்குள்ள வாழைகளில் இன்னோர் அதிசயம் என்னவென்றால், இவற்றின் பழங்கள் பார்க்க மலைப்பழம் போல இருக்கும். ஆனால், உரித்தால் ரஸ்தாளிப் பழம் போல இருக்கும். அதேபோல, மரத்தை வெட்டினால் ரத்தம் போல சிவப்பு நிறத் திரவம் வெளிவரும். ஆனால், இவை செவ்வாழைகளும் அல்ல. இந்தப் பழங்களிலிருந்து செய்யப்படும் அபிஷேக பஞ்சாமிர்தத்தை, ஒரு கையளவு சாப்பிட்டோமென்றால், ஒரு நாள் முழுவதும் பசியே எடுக்காது.
திருக்களம்பூர் என்று இத்தலத்தின் பெயர் ஏற்பட்ட வரலாறு
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், சோழர்கள்மீது படையெடுத்துச் சென்றபோது, வழியில் வாழைத் தோப்புக்கு நடுவே பயணித்தார். வெகுவேகமாகச் சென்ற அவரது குதிரையின் கால் குளம்பு சிவலிங்கத்தின் மேல் பட்டதால், லிங்கம் மூன்று பிளவுகள் ஆகி, அதிலிருந்து குருதி கொட்டத் தொடங்கியது. தெய்வக் குற்றத்தால் மன்னரின் பார்வை பறிபோனது. பரிதவித்த மன்னன், இறைவனிடம் மண்டியிட்டு, 'இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும். பறிபோன பார்வை மீண்டும் கிடைக்கவேண்டும்' என்று வேண்டினார். அதற்கு இரங்கிய இறைவன்,'எனக்கு இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்' என்று அருளினார். மன்னனும் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற, அவரின் பார்வை திரும்பியது. இதையொட்டி கதலிவனநாதருக்கு, ஸ்ரீவைத்தியநாதசுவாமி என்ற பெயரும் உண்டு.
இன்றும் மூலவரின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களைக் காணலாம். அதனால்தான் இவ்வூர் 'திருக்குளம்பூர்' என்று அழைக்கப்பெற்று, பின்னாளில் திருக்களம்பூர் என்று மருவியது. பாண்டிய மன்னர்கள் எங்கே கோயில் கட்டினாலும், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் இல்லாமல் கட்டுவது இல்லை. இங்கேயும், பிராகாரத்தில் ஸ்ரீமீனாட்சியும் ஸ்ரீசொக்கநாதரும் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார்கள்.
திருமண பாக்கியம், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர அருளும் தலம்
திருமணம் ஆகாத ஆண்களோ அல்லது பெண்களோ, வியாழக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டுவிட்டு, அந்தப் பாயசத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், விரைவில் திருமணம் நடக்கும். அதேபோல் கருத்து வேற்றுமையால் பிரிந்துபோன தம்பதி, மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினால், மிக விரைவில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிணிகளால் அவதிப்படுவோர், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய் கள் தீரும். குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட் டால், விரைவில் குழந்தை பாக்கி யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.