அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்
நவ நரசிம்மர் அருளும் தட்சிண அகோபிலம்
திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் தலம்
ஐந்து பெருமாள் எழுந்தருளி இருக்கும் பஞ்ச திருப்பதி தலம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் 15 கி.மீ, தூரத்தில் அமைந்திருக்கிறது அவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில். தட்சிண அகோபிலம் என்று சொல்லப்படும் இந்த நவநரசிம்ம தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி அவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட புராணத்தில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
அவணியாபுரம் பஞ்ச திருப்பதி என போற்றப்படுகிறது. பிருகு முனிவருக்கு அருள் செய்ய, பெருமாள் அவருக்கு திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் கோலத்தில் இங்கு எழுந்தருளி அருள் புரிந்தார்.
இக்கோவில் சன்னதிகள் மலையில் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜபெருமாளும், ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர்.
கீழே குகை போன்ற கர்ப்பகிரகத்தில் லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம், சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் அமைந்திருக்கின்றது. இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலைக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார். அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான் ஏற்று பெருமாளின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக, அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார்.
லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், 'தட்சிண அகோபிலம்' என்று போற்றப்படுகிறது.
பிரார்த்தனை
இந்தக் கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெருமாளின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.