மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி தரும் மீனாட்சி அம்மன்

மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அம்பிகையை வணங்கிய பின்னரே இறைவனை வணங்கி வருகின்றனர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். அதனால், அம்பிகை தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.

அவை

1. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

2. ப்ராத சந்தியில் – பாலா

3. 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி

4. 12 – 15 நாழிகை வரையில் – கெளரி

5. மத்யானத்தில் – சியாமளா

6. சாயரக்ஷையில் – மாதங்கி

7. அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

8. பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

மீனாட்சி அம்மனுக்கு ஐந்து கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். ஒரேநாளில் புவனேஸ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

குழந்தை வரம் வேண்டுவோர் அன்னை மீனாட்சியைக் காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சி கொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

 
Previous
Previous

கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

Next
Next

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்