ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்
அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்
கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்ப கோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருந்து தேவன்குடி.
முற்காலத்தில் ஈசனின் சாபத்தினால் நண்டாக மாறிய அம்பிகை, திருந்து தேவன்குடித் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.
இந்த நிலையில், தான் வளர்த்து வந்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு, இந்திரன்கோபம் கொண்டான் . தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம்.
கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.