பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
கண் நோய்களை தீர்க்கும் அகத்தீஸ்வரர்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார் என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும், `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார். இக்கோவில் ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.
கருவறைக்குள் அகத்தீஸ்வரர் சாய்ந்த திருமேனியாக வடக்கே சாய்ந்து தென்கிழக்கைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், கண் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட, சிவபெருமான் கண் நோய் தீர்த்த வரலாறு
இக்கோவில் இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன்பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன், இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். அவருக்கு நல்லமங்கை என்றுஒரு மகள் இருந்தாள். சிறுவயதில் அவளின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.
வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று கூத்தன் முடிவு செய்து, அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். கி.பி 1268, ஆண்டில், ஹொய்சாள மன்னன் ராமநாதன் இக்கோவிலில் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். அவனிடம் இருந்த நிதி தீர்ந்து விட்டதால், கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். அதனால் கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி இத்தலத்து இறைவன் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அருளால் நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் இறைவனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்க இறைவன் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் இறைவனின் திருப்பணிக்கே வழங்கினான். இறைவனுக்கு கழஞ்சுபொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான்.
இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது.