கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை.

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை அன்னாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில், ஒவ்வொரு வருடமும் தமிழ் ஆண்டு வருடப் பிறப்பு, சித்திரை பெளர்னமி, ஐப்பசி மாதப் பிறப்பு, ஐப்பசி பெளர்னமி ஆகிய நான்கு தினங்களில் மூலவர் காளஹஸ்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது தனிச் சிறப்பாகும்.

அன்னாபிஷேக தரிசன பலன்

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இத்தலம் தூத்துக்குடி நகரிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ள பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

படங்கள் உதவி : திரு. குமரகுருபரன் அர்ச்சகர், கீழமங்கலம்

 
Previous
Previous

பொரவாச்சேரி கந்தசாமி கோவில்

Next
Next

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்