பழனியப்பர் கோவில்

வேடன் கோலத்தில் முருகன்

முருகனின் மூக்கு, முகவாய், மார்பில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுககுறிச்சி என்னும் இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பழனியப்பர் கோவில். 240 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு கார் மூலம் செல்ல ரோடு வசதியும் உண்டு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, தமிழ் மூதாட்டி அவ்வையார் ஆகியோர் வழிபட்டு இருக்கிறார்கள்.

முருகன் மும்மூர்த்திகளின் தொழிலை பூலோகத்தில் செய்த தலம்

ஒரு சமயம் முருகன், பிரம்மாவிடம் சென்று, ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டார். பிரம்மாவுக்கு அதன் பொருள் தெரியவில்லை. விஷ்ணு, சிவன் ஆகியோரிடமும் கேட்டார் முருகன். அவர்களும் சரியான பதில் சொல்லவில்லை. படைப்பது, காப்பது, அழிப்பது ஆகிய முக்கிய முத்தொழில்களைச் செய்யும் இந்த மூவரையும், முருகன், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஏனெனில், அவருக்கு ஓம் என்ற மந்திரத்தின் பொருள் தெரியும். எல்லாம் நானே என்பதுதான் அந்த மந்திரத்தின் எளிய பொருள். பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்து, மும்மூர்த்திகளின் தொழிலையும் முருகனே மேற்கொண்டார்..முருகன் தங்கிய தலம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள பேளுக்குறிச்சி கூவை மலை. கூவை என்பது கழுகு போன்ற பெரிய பறவை. வானத்திலிருந்து கூவை மலையைப் பார்த்தால், கழுகு சிறகை விரித்திருப்பது போல காணப்படுவதால் இப்பெயர் வந்தது.

வேடன் கோலத்தில் கையில் சேவலுடன் காட்சி தரும் முருகன்

இத்தல முருகனுக்கு பழனியாண்டவர் எனப் பெயர். இங்குள்ள முருகனின் கையில் சேவல் கொடிக்கு பதிலாக, சேவலே இருப்பதைக் காணலாம். பழனியாண்டவரை நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று தரிசித்தால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால், பெண் வடிவமாகவும் காட்சி தருவது விசேஷத்திலும் விசேஷம். சக்தியும் - சிவனும் இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவம் என இதைக் கொள்ளலாம். எனவே, இவருக்கு சக்தி அதிகம். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலையைப் போலவே, பழனியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார், போகர் சித்தர். முருகன், வேடன் கோலத்தில் இருப்பதால், தலையில் கொண்டையும், வேங்கை மலர்க்கிரீடமும், கொன்றை மலரும், ருத்திராட்ச மாலையும் சூடியபடி இருக்கிறார். காலில், காலணி, வீரதண்டை அணிந்திருக்கிறார். இடது கையில், வேலும், இடுப்பில், கத்தியும், வலது கையில், வஜ்ரவேலும் தாங்கியிருக்கிறார்.

மூலவர் பழனியப்பர் சிவபெருமான் பார்வதியின் அம்சம் என்பதால், அவர் நெற்றியில் இருக்கும் மூன்று பட்டை விபூதிக் கோடுகள் சிவனையும், விபூதியின் மேல் இருக்கும் குங்குமப்பொட்டு பார்வதியையும் குறிக்கிறது.

முருகனின் மூக்கு, முகவாய், மார்பில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்

இக்கோவிலில் நடக்கும் பவுர்ணமி பூஜை மிகவும் விஷேசமானதும் தனிச் சிறப்பும் கொண்டது..இரலில் முருகனுக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவரின் மூக்கு, முகவாய் மற்றும் மார்பில் இருந்து வியர்வை துளிர்க்கும். அப்போது மூன்று விதமான நறுமண வாசனை முருகனின் திருமேனியிலி ருந்து வெளிப்படும்.

பின்னர் முருகனுக்கு அலங்காரம் செய்து நள்ளிரவு 11.50 மணிக்கு கருவறைக் கதவை மூடிவிடுவார்கள். பௌர்ணமி நள்ளிரவில் சித்தர்கள் வந்து முருகனை பூஜை செய்து வழிபடுவார்கள் என்பதால்தான் கருவறைக் கதவை அடைத்து விடுவார்கள். பின்னர் கதவை திறந்து பார்த்தால் முருகனுக்கு பூஜை நடந்த தடயங்களும், முருகனின் அலங்காரம் கலைந்த நிலையும் காணப்படும். இந்த அதிசயம் இன்றளவும், ஒவ்வொரு பௌர்ணமி பூஜையன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

யானைப்பாழி தீர்த்தம்

மலையடிவாரத்தில் யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை, யானைப்பாழி தீர்த்தம் என்பர். இந்த நீரை உடலில் தெளித்தால், தோல் மற்றும் எலும்பு நோய் நீங்கும் என்பர். இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேடன் கோலத்தில் கையில் சேவலுடன் காட்சி தரும் முருகன்

யானைப்பாழி தீர்த்தம்

 
Previous
Previous

திருமுருகநாதர் கோவில்

Next
Next

கண்ணாயிரநாதர் கோவில்