
திருமுருகநாதர் கோவில்
கூப்பிடு விநாயகர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்.
ஒரு சமயம், தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தனது நண்பரான சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நாயனாரின் அழைப்பை ஏற்று சேர நாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள கோயில்களை தரிசித்தார். பின்னர் அவர் திருவாரூருக்கு திரும்பும் போது. சேரமான் பெருமான் பல பரிசு பொருட்களைக் கொடுத்து சுந்தரரை சிறந்த முறையில் வழியனுப்பினான்.
தனக்கு வேண்டியதை இறைவனிடம் முறையிட்டு பெறுவது சுந்தரரின் வழக்கம். ஆனால் தற்போது தன்னிடம் வேண்டாமல் சேரமான் பெருமானிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று வருகிறானே என எண்ணிய சிவபெருமான், பரிசுப் பொருள்களுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது, தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி, சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரரை, விநாயகப் பெருமான் கூப்பிட்டு சிவபெருமான் குடிகொண்டிருந்த கோவிலைச் சுட்டிக் காட்டி உதவினார். கூப்பிட்டு உதவியதால் அங்கிருந்த விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.
பொருள் இழந்த கவலையுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று அங்குள்ள இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று சுந்தரர் சிவனைத் திட்டிப் பதிகம் பாட, அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக தவரலாறு உள்ளது.
வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

செஞ்சடையப்பர் கோவில்
உயிர் மீட்ட விநாயகர்
கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்பனந்தாள். இங்கு வாழ்ந்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயனார். திடீரென ஒரு நாள், இவர் மகன் இறந்து விடவே அவனை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இத்தல விநாயகர் வழி மறித்து, அங்குள்ள நாககன்னித் தீர்த்தத்தில் நீராடி விட்டு மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார். அங்கு சென்றதும் இறந்த மகன் உயிர்த்தெழுந்தான். இவ்விநாயகர் இன்றும் 'உயிர் மீட்ட விநாயகர்' என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.

கண்ணாயிரநாதர் கோவில்
கடுக்காய் பிள்ளையார்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே தேவாரத் தலமான திருக்காரவாசல் உள்ளது. கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் கரையில், கடுக்காய் பிள்ளையர் தனிச் சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு கடுக்காய்ப் பிள்ளையார் என்று பெயர் வர ஒரு தனி வரலாறு உள்ளது.
வணிகன் ஒருவன, தன் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் வழியில் இத்தலத்தில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் கடுக்காய இருக்கிறது என்று வேண்டுமென்றெ பொய் சொன்னான். விநாயகர் அவன் பதிலை கேட்டு புன்னகை புரிந்து விட்டு சென்றுவிட்டார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்..
புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில், இந்திரன், இத்தலத்து சேஷ தீர்த்தத்தில் நீராடி விநாயகரான கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம்.

கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில்
சாரமற்ற கரும்பை இனிப்பாக மாற்றிய விநாயகர்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில். கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. வராஹ அவதாரத்தின்போது பகவான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையாருக்கு வராஹப் பிள்ளையார் என்ற பெயரும் உண்டு.
கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாரான இவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
வணிகன் ஒருவன் கட்டுக்கட்டாக கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு இந்த ஆலயத்தின் வழியாக சென்று கொண்டிருந்தான். அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்த பிள்ளையார் ஒரு சிறு பாலகனாக வேடம் தரித்து அவனிடம் ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். வணிகன் கரும்பை கொடுக்க மறுத்தான். அங்கிருந்தவர்கள் பாலகன் விநாயகருக்காக வணிகனிடம் பரிந்துரை செய்தார்கள். அவர்களுக்கு பதில் அளித்த வணிகன், இக்கரும்புகள் ஒடித்து உறிஞ்சினால் கரிக்கும். வெல்லமாக மாற்றிய பிறகு தான் இனிக்கும் என்றான்.பாலகன் விநாயகரும் கோயிலுக்குள் சென்று மறைந்து விட்டார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். விநாயகர் கோயிலுக்குள் சென்று தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். அவனை மன்னித்த விநாயகர், மீண்டும் சக்கை கரும்பை இனிப்பாக மாற்றினார். ஆயிரம் கரும்புகளுக்குள்ளும் இனிப்புச் சுவை ஊறியது. அன்று முதல் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று அழைக்கப்பட்டார்,