செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்
கந்தனுக்கு தன் கையிலிருந்த கரும்பை பரிசாக அளித்த காமாட்சி அம்மன்
பெரம்பலூர் - திருச்சி ரோட்டில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலத்தூரிலிருந்து, 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இத்தலத்தில் காமாட்சி அம்மன் சன்னதி, தனிக் கோவிலாக உள்ளது. கருவறையில் காமாட்சி அம்மன் நான்கு திருக்கரங்களுடன் அபய, வரத முத்திரையோடு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபட்டால் எத்தகைய நற்பலன்கள் கிடைக்குமோ, அத்தகைய நற்பலன்களை இந்த அம்மன் இடத்தில் நாம் வரம் பெறலாம். அன்னை காமாட்சியம்மன், தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி ஆசி வழங்கினார். காமாட்சி அம்மன் அளித்த 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி, முருகப்பெருமான் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ள குன்றின் மேல் தண்டாயுதபாணி சுவாமியாக அருள்பாலிக்கிறார். அன்னை காமாட்சியம்மன் கையில் கரும்பின்றி, நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.